1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 11 மே 2016 (11:42 IST)

’ஜெயலலிதா சிறை சென்றபோது நான் முதல்வராகி இருப்பேன்’ - திருநாவுக்கரசர்

அதிமுகவில் இருந்து என்னை புறந்தள்ளியவர் ஜெயலலிதா. இல்லையென்றால், அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா சிறை செல்லும் போதெல்லாம் நான் முதல்வராகி இருப்பேன் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
 

 
ஆலங்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சிவ.வி. மெய்யநாதனுக்கு ஆதரவாக புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் வாக்கு சேகரித்து சு.திருநாவுக்கரசர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
அப்போது பேசிய அவர், "அதிமுக ஆட்சியில் பல்வேறு அரசு திட்டங்களுக்கு கமிஷன் வாங்கியதைத் தவிர வேறெந்த பணியும் நடைபெறவில்லை. அமைச்சர்கள் எல்லாம் கமிசன் வாங்கிக் கொடுக்கும் புரோக்கர்களாக மாறிவிட்டார்கள்.
 
நாட்டில் தீண்டாமையை எப்போதோ டாக்டர் அம்பேத்கர் ஒழித்துவிட்டாலும், தமிழ்நாட்டில் அதிமுக பொதுக்கூட்டங்களில் தீண்டாமையை கடைபிடிப்பதுபோல வேட்பாளர்களிடம் நடந்துகொள்கிறார் ஜெயலலிதா. நம்ம அமைச்சர்கள் எல்லாம் கார் டயர்களையும், விமானத்தையும் பார்த்து கும்பிடும் அவல நிலையில் உள்ளது. 
 
எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக-வில் ஜெயலலிதாவை நானும், வீரப்பனும், முத்துச்சாமியும் இன்னும் பலரும் கடும்  எதிர்ப்புகளுக்கிடையே சேர்த்தோம். ஆனால் பின்னர் என்னையே அந்தக் கட்சியில் இருந்து புறந்தள்ளியவர் ஜெயலலிதா.
 
இல்லையென்றால், அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா சிறை செல்லும் போதெல்லாம் நான் முதல்வராகி இருப்பேன். ஒ.பன்னீர் செல்வம் ஆகி இருக்க முடியாது.
 
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அறந்தாங்கியை சேர்ந்தவர் முதலமைச்சரானார் என்ற பெயராவது எனக்கு இருந்திருக்கும். இதைக் கெடுத்தவர் ஜெயலலிதாதான்.  
 
குடும்பமே இல்லாதவருக்கு எதுங்குங்க இவ்வளவு சொத்து. சசிகலாவுக்கு சொத்து வாங்கவே நேரம் போதவில்லை. ரெண்டு மாசத்திற்கு முன்னால் கூட ஆயிரம் கோடிக்கு தியேட்டர் வாங்கி இருக்கிறார்கள். அவை எல்லாம் யாருக்காக?
 
திமுகவை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்ற வைகோவின் நோக்கம் நிறைவேறாது. பாவம் விஜயகாந்த், வைகோவின் பேச்சைக் கேட்டு இப்படி போய் விட்டார்” என்று கூறியுள்ளார்.