நான் ‘ஸ்டைலாக’ கிளம்பிவிட்டேன் : இளமை திரும்பும் ஸ்டாலின்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: ஞாயிறு, 15 மே 2016 (14:36 IST)
நானும் மாணவர்களை போன்று ‘ஸ்டைலாக’ துணி போட்டுவிட்டு கிளம்பிவிட்டேன். எனக்கு வயது 63 ஆகிறது. ஆனால் இதுபோன்ற துணிகளை போட்ட பின்னர் 36 வயது ஆகிவிடுகிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
 
பிரச்சார நிறைவு நாளான நேற்று குளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் ரமணா நகர் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
 
அப்போது, பேசிய அவர், "கொளத்தூர் தொகுதி என்னுடைய தாய் வீடு. நான் கடந்த முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, திமுக ஆட்சி பொறுப்பை ஏற்கவில்லை. ஆனாலும் தொகுதி மக்களுடைய கோரிக்கைகளையும், குறைகளையும் தீர்க்க என்னால் முடிந்த அளவுக்கு கடுமையாக பாடுபட்டேன்.
 
இந்த முறை திமுக கண்டிப்பாக ஆட்சியை பிடிக்கும் என்பது உறுதியாகியுள்ளது. அந்த ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கொளத்தூர் தொகுதிக்கு பாடுபட மீண்டும் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கொளத்தூர் தொகுதியை தமிழகத்தின் முன்னோடியான தொகுதியாக உருவாக்குவேன் என்று நான் உறுதி கூறுகிறேன்.
 
நானும் மாணவர்களை போன்று ‘ஸ்டைலாக’ துணி போட்டுவிட்டு கிளம்பிவிட்டேன். எனக்கு வயது 63 ஆகிறது. ஆனால் இதுபோன்ற துணிகளை போட்ட பின்னர் 36 வயது ஆகிவிடுகிறது. நானும் மாணவன்தான். காவல்துறைக்கு உரிய மரியாதையை பெற்றுத்தந்தவர் கலைஞர். ஆனால் அதிமுக ஆட்சியில் காவல் துறை ஏவல் துறையாக மாறிவிட்டது.
 
திமுக ஆட்சிக்கு வந்த உடன் காவல் துறையில் அரசியல் தலையீடு இருக்காது. கட்டப்பஞ்சாயத்து இருக்காது. அப்படி நடந்தால் அதனை தடுக்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். ‘நமக்கு நாமே’ பயணத்தின் மூலம் நான் கற்ற அனுபவம் மூலம் சொல்கிறேன். மக்களை தேடி இனிமேல் பதவியில் இருப்பவர்கள் செல்லவேண்டும்.
 
மக்கள் அவர்களை தேடி வரவேண்டியது இல்லை. திமுக எம்.எல்.ஏ.க்கள் யாராக இருந்தாலும் சரி மக்கள் எப்போது நினைக்கிறார்களோ அப்போது அங்கு இருக்கவேண்டும். தொகுதி மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
 
தொகுதிக்கு சரியாக பணியாற்றாத எம்.எல்.ஏ.க்களை மக்கள் ஆகிய நீங்கள் 5 வருடம் கழித்து தான் தண்டிப்பீர்கள். ஆனால் தொகுதி மக்களுக்கு சரியாக பணியாற்றாத எம்.எல்.ஏ.க்கள் மீது திமுக தலைமைக் கழகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி கூறுகிறேன்” என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :