வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 4 நவம்பர் 2015 (19:45 IST)

தீபாவளியன்று பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது எப்படி : தீயணைப்பு துறையினர் விளக்கம்

தீபாவளியன்று பட்டாசுகளை எப்படி பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு துறையினர் பள்ளி மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.


 
 
பொதுவாக தீபாவளியன்று குழந்தைகள் பட்டாசுகளை ஆர்வமாக வெடிப்பதுண்டு. ஆனால் சில சமயம் அதுவே ஆபத்தாக மாறுவதுண்டு. அதனால் பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்று தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
 
இதுகுறித்து குன்னூரில் நடந்த முகாமில் மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அதில் கூறப்பட்ட அறிவுரைகள்:
 
குழந்தைகள் பெரியவர்களின் மேற்பார்வையில்தான் பட்டாசு வெடிக்க வேண்டும். ராக்கெட் போன்ற வெடிகளை குடிசைகள் இல்லாத திறந்தவெளியில் வெடிக்க வேண்டும். சாலையில் பட்டாசுகளை வெடிப்பது இருமடங்கு ஆபத்தானது. இதனால் தீ விபத்துகளுடன், சாலை விபத்தும் ஏற்படும் அபாயம் உள்ளது.
 
குழந்தைகளின் சட்டைப்பையில் பட்டாசுகளை வைத்திருப்பது ஆபத்தானது. வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கவும், திரும்ப கொளுத்தவும் பெரியவர்கள் அனுமதிக்கக்கூடாது.
 
ஈரமான பட்டாசுகளை திரும்ப வெடிக்கச்செய்ய முயற்சிக்க கூடாது. பட்டாசுகளை வீட்டுக்கு வெளியே திறந்தவெளியில் வைத்து வெடிப்பது பாதுகாப்பானது ஆகும்.
 
தளர்வான ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்க கூடாது. இயன்றவரை பருத்தி ஆடைகளை அணிவது பாதுகாப்பானது ஆகும்.
 
எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டால் ஓடக்கூடாது. உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும் அல்லது கீழே படுத்து உருள வேண்டும். தீக்காயத்துக்கு தண்ணீர் உடனடியாக ஊற்ற வேண்டும். கிரீஸ், எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.

பட்டாசு வெடிக்கும் போது முன்னெச்சரிக்கையாக ஒரு வாளி தண்ணீர் அருகில் வைத்திருப்பது நல்லது.
என்பது போன்ற அறிவுரைகள் அந்த பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது.