1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 27 ஜூன் 2016 (15:51 IST)

சுவாதியை எத்தனை முறை படுகொலை செய்வீர்கள்?

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த இளம்பெண் படுகொலை தமிழகத்தையே உலுக்கியது. கடந்த 24-ஆம் தேதி காலை 6:30 மணிக்கு சுவாதியின் படுகொலை நுங்கம்பாக்கம் இரண்டாவது நடைமேடையில் அரங்கேறியது.


 
 
அப்பொழுது தான் தனது ஆசை மகளை ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு சென்றார் சுவாதியின் தந்தை. அடுத்த சில நிமிடமே படுகொலை செய்யப்பட்டார் சுவாதி. தனது மகளுக்கு இப்படி நிகழும் என்றும், அவளது மரணம் இப்படி கொடூரமாக இருக்கும் எனவும் அவர் கனவில் கூட நினைத்திருக்கமாட்டர்.
 
மகளை இழந்த மீளா துயரில் இருக்கும் சுவாதியின் தந்தையை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது, ஊடகங்களும் சமூக வலைதளங்களும். ஒரு முறை படுகொலை செய்யப்பட்ட சுவாதியை தங்களின் கருத்துக்கள் மூலம் பல முறை படுகொலை செய்து வருகின்றனர் சிலர்.

காதல் விவகாரத்தால் தான் இந்த படுகொலை செய்யப்பட்டிருக்கும், சுவாதியின் நடத்தையில் பிரச்சனை இருக்கும் என பல யூகங்களின் அடிப்படையில் ஒரு சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சுவாதியை படுகொலை செய்யும் அளவுக்கு ஒரு பையன் துணிகிறான் என்றால் அவள் ஏதும் தவறு செய்யாமலா இருப்பாள் என கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் பதிவிடும் அளவுக்கு சிலர் சமூக வலைதளங்களில் செயல்படுவது எவ்வளவு கேவலமான ஒன்று.
 
மேலும், சுவாதி மேல் ஜாதியை சேர்ந்தவர், பிராமண பொண்ணு அதனால் தான் இந்த படுகொலைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என இதிலும் கூட தங்கள் ஜாதிய அரசியலை நுழைக்கிறார்கள்.
 
தங்கள் வீட்டுப் பிள்ளை இறந்த சோகத்தில் இருக்கும் சுவாதியின் உறவினர்களை இது போன்ற வதந்தி செய்திகளும், சுவாதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வரும் யூகச் செய்திகளும் மேலும் கவலை அளிக்கிறது.
 
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவரது தந்தை, சுவாதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களை கேட்டுக்கொண்டுள்ளார். சுவாதியின் கொலையின் பின்னணி குறித்து ஊடகங்களில் வதந்திகளை எழுதி அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தங்கள் குடும்பம் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
மேலும், சுவாதியின் உயிரை இனி யாரும் கொண்டு வரப்போவதில்லை. பிறகு ஏன் அவளது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும், நடத்தையைப் படுகொலை செய்ய வேண்டும்? என்றும் சுவாதியின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.