1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 24 ஜூலை 2014 (13:52 IST)

நள்ளிரவில் மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியரை சரமாரி வெட்டிய வாலிபர்

ஓசூரில் தனியார் மருத்துவமனையில், மனைவின் பிரசவத்துக்காக அதிக அளவில் பில் போட்டதால் ஆத்திரம் அடைந்த வாலிபர் அங்கிருந்த ஊழியரை அரிவாளால் சரமாரி வெட்டினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை சாலையில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு ஓசூர் தின்னூர் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சசி என்பவர் தனது மனைவியை பிரசவத்துக்காக சேர்த்திருந்தார்.

பிரசவம் முடிந்ததும் அவர் மருத்துவமனைக்கு பணம் கட்டவில்லை. மருத்துவமனை நிர்வாகம் அதிக அளவில் பில் போட்டு உள்ளதாகவும், அதை தன்னால் கட்ட இயலாது என்றும் அவர் கூறி மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் சொல்லாமல் தனது மனைவியை வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார்.

இதனால் சசியிடம் மருத்துவர்கள் தொலைபேசியில் பேசினார். நேரில் வந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசினால் பில் தொகையை குறைப்பதாக அவர் கூறினார். ஆனால் அவர் நேரில் வரவில்லை.

இந்நிலையில் அதிகாலை 2 மணிக்கு வீச்சரிவாளுடன் சசி மருத்துவமனைக்கு வந்தார். அவர் மருத்துவர் மற்றும் பில்லிங் செக்சன் ஊழியர் பற்றி இதர ஊழியர்கள் மற்றும் நோயாளிகளிடமும் விசாரித்தார்.

அவர்கள் இரண்டு பேரும் பணியில் இல்லை என்று கூறியவுடன் அவர் நேராக மருந்து வழங்கும் பிரிவுக்கு சென்று அங்கு பணியில் இருந்த பாகூரைச் சேர்ந்த ஊழியர் பிரகாஷ் என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் கை, கால் மற்றும் கழுத்தில் வெட்டு விழுந்தது. இதைத் கோடர்ந்து சசி அரிவாளுடன் மருத்துவமனையை விட்டு தப்பினார்.

மருத்துவமனை ஊழியர் வெட்டப்பட்ட தகவல் கிடைத்ததும் மற்ற ஊழியர்களும், நோயாளிகளும் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அதே மருத்துவமனையில் வெட்டுப்பட்ட பிரகாசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

சசி மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியரை வெட்டும் காட்சி மற்றம் அவர் அரிவாளுடன் செல்லும் காட்சி உள்ளிட்ட அனைத்து காட்சிகளும் மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது.

இதை ஆதாரமாக கொடுத்த மருத்துவமனை நிர்வாகம் சசி மீது நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளது. ஓசூர் டவுன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஊழியரை வெட்டி விட்டு தப்பி ஓடிய சசியைத் தேடி வருகிறார்கள்.