வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : புதன், 23 ஏப்ரல் 2014 (15:54 IST)

'தேர்தல் மூலம் திருப்பி அடி தமிழா' - செந்தமிழன் சீமான் அறைகூவல்!

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை அடையாளம் காட்டுவதற்கான இந்த தேர்தலில் அனைவரும் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றும்படி நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அதில் அக்கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:-
 
இதுவரை தமிழ்நாடு பார்த்திராத ஐந்து முனைத் தேர்தல் இது. கூட்டணியைக் கட்டமைத்தவர்களும், கூட்டணிக்கு ஆள் கிடைக்காதவர்களும், கூட்டணியைத் தவிர்த்தவர்களுமாக... தமிழக வாக்காளர்களுக்குப் பலவிதமான முகங்களைப் பகுத்துப் பார்க்கக் கிடைத்திருக்கும் வரலாற்று வாய்ப்பு இந்த தேர்தல்.
"நம் கையில் இருக்கும் வாக்கு எதையும் சரி செய்வதற்கான மகத்தான ஆயுதம்". ஐந்து வருட ஆட்சிக்கான மதிப்பெண்ணாகவும், அடுத்து வருகிற  ஆட்சிக்கான நிர்ணயிப்பாகவும் நம்முடைய வாக்கை நாம் பயன்படுத்த வேண்டும். வாக்காளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்தலின்போதும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால், வாக்கு சதவிகிதம் 90-ஐ நெருங்கக்கூட இத்தனை வருட சுதந்திர இந்தியாவில் வழி பிறக்காதது வேதனையானது.

'அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்களுக்கான சேவை' என்கிறார் பெருந்தலைவர் காமராஜர்.
'அரசியல் என்கிற எண்ணமே இல்லாதவன் மனிதனாகவே இருக்க முடியாது' என்கிறார் மகாத்மா காந்தியடிகள்.
 
'ஒவ்வொரு மனிதனின் வார்த்தையிலும் அரசியல் இருக்கிறது' என்கிறார் மாமேதை லெனின்.
 
'அரசியலும் கல்வியும் இருகண்களை ஒத்தவை' என்கிறார் புரட்சியாளர் பகத்சிங்.
 
'எதிலுமே புறந்தள்ளி நிற்பது வலிமையற்ற அரசியலையும் நலிவுற்ற பொருளாதாரத்தையும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத நிலையையும் உருவாக்கிவிடும் என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர்.
 
இவற்றையெல்லாம் மனதில் கொண்டு நம் தேசத்துக்கு யார் தேவை என்பதை ஆராய்ந்து வாக்களிக்க தமிழக மக்கள் தயாராக வேண்டும். மற்ற மாநிலங்களில் இல்லாத இனரீதியான அடியை அனுபவித்திருப்பவர்கள் நாம். ஈழத்தை இழவுக்காடாக்கியவர்களும் அதற்குத் துணை நின்றவர்களும், இன்றைக்கும் நம் மீனவர்கள் மீதான தாக்குதலுக்கும், வலை அறுப்புகளுக்கும் வேடிக்கையை மட்டும் பதிலாக்கியபடி இருக்கிறார்கள். தமிழக மீனவர்கள் இந்திய மீனவர்களாக அறிவிக்கப்படும் நிலையைக்கூட இத்தனை வருடகால அரசியல் நமக்கு கையளிக்கவில்லை.
 
இத்தனை காலம் நம் தமிழர் நலன் போற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக நாடகம் ஆடுபவர்களை அடையாளம் கண்டும், 
யார் ஆட்சிக்கு வந்தால் நமக்கான விடிவு பிறக்கும் என்பதை ஆராய்ந்தும் வாக்களித்து வரலாற்றுப் புரட்சியை படைக்கத் தமிழக மக்கள் தயாராக வேண்டும்.
 
தமிழன் எப்படி திருப்பி அடிப்பான் என்பது இந்தத் தேர்தல் மூலம் இந்திய தேசத்துக்குத் தெரியட்டும். சதிராடியவர்களை வீழ்த்தவும், சரியானவர்களைத் தேர்ந்தெடுக்கவும், தமிழர்கள் கற்றுக்கொண்டு விட்டார்கள் என்பதை இந்த தேர்தலின் முடிவுகள் எல்லோருக்கும் தெரியப்படுத்தட்டும்.
 
தமிழகத்தில் நூறு சதவிகித வாக்கு பதிவை நிகழ்த்தி வரலாற்று நிகழ்வுக்கு ஒவ்வொரு குடிமக்களும் தயாராக வேண்டும். ஆதலினால் நாளை வாக்குரிமையுள்ள அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும்" - என அந்த அறிக்கையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.