வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 8 நவம்பர் 2015 (22:59 IST)

குழப்பவாதி நடிகர் கமலஹாசன்: போட்டுதாக்கும் ராம.கோபாலன்

நடிகர் கமல்ஹாசன் தனது 61வது பிறந்த நாள் கொண்டாடத்தின் போது,  சகிப்புத்தன்மை, அரசியல் பிரவேசம், மாட்டுக்கறி விவகாரம் மற்றும் கடவுள் நம்பிக்கை போன்ற பல சம்பவங்களை வெளுத்து வாங்கினார். அவரது இந்த பேச்சுக்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 

 
இது குறித்து, இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
நடிகர் கமல்ஹாசனின் 61 ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்துகளையும் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன். அவரது பிறந்த நாள் விழாவில் தன்னை பாராட்டி அளித்த இறைவடிவம் கொண்ட சிலையால் எந்த பயனும் இல்லை, அதனை உருக்கி பயன்படுத்துவதாக கூறியுள்ளார்.
 
ஒரு கலைஞருக்கு, அந்த சிலாரூபத்தில் உள்ள கலை வடிவத்தை ரசிக்க தெரிய வேண்டமா? பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டாமா? அதில் உள்ள தங்கத்தின் மதிப்பு மட்டும் தெரிந்தால் எப்படி? எந்தவொரு கலையைப் போற்ற வேண்டும், கலையே தெய்வீகமானது இல்லையா?
 
இறைவன் பற்றிய அவரது கருத்தில் எத்தனை குழப்பம் ஏன்? உலகில் எத்தனை வேறுபாடு ஏன் என இறைவனைக் கேட்பேன் எனும் கமலஹாசன், தான் எப்படியிருக்கிறாரோ அப்படியே எல்லா படங்களிலும் நடித்தால்.. எப்படியிருக்கும்.. அவருக்கே சலித்துவிடாதா? பார்ப்பவர்கள் நிலை? இவர் தசாவதாரம் எடுத்து, பத்து மாறுபட்ட வேடத்தில் நடிக்கலாம், ஆனால், உலகில் எந்த வித்தியாசமும் இருக்கக்கூடாது என்பது வேடிக்கையானது.
 
ஐந்து விரலும் ஒன்றுபோல் இருந்தால் எதுவும் செய்ய முடியாது. இவரது படத்தில் எல்லா பாத்திரங்களும் கதாநாயகர்களாகவே நடித்தால் எப்படியிருக்கும்?
 
கடவுளுக்கு எல்லா மொழிகளும் தெரியும், மௌனமும் புரியும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. அப்படியிருக்க இறைவனுக்கு தமிழ் தெரியாது என்று இவராக புரிந்து கொண்டது சிறுப்பிள்ளைத்தனமானது.
 
அதுமட்டுமல்ல இவர் வேற்று மொழியில் நடிக்கும் போது அந்த மொழியை அறிந்து கொள்வதில்லையா? அப்படி இறைவன் எல்லோருக்கும் பொதுவானன். இறைவனுக்கு செய்யப்படும் வழிபாட்டு மொழியை வைத்து அரசியல்வாதிபோல பேசி குழப்புவானேன்?
 
தான் கூறிய கருத்து தனக்கே உடன்பாடு இல்லை என்பதை அவர் அறியாதவர். மேலும், தன்னை அவர் பகுத்தறிவாதி என்று கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது.
 
அவரது பிறந்த நாளில் அவருக்கு எல்லோரும் வாழ்த்து கூறும்போது, ஏன் இப்படி பேசி தனது ரசிகர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறாரே என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என அதில் தெரிவித்துள்ளார்.