தேசிய நெடுஞ்சாலை துறைக்கு நடுரோட்டில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய வினோதம்

Suresh| Last Modified வியாழன், 1 ஜனவரி 2015 (11:21 IST)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை(209) குண்டும், குழியுமாக இருப்பதை கண்டித்து தேசிய நெடுஞ்சாலைக்கு மலர் தூவி கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் அஞ்சலி செலுத்தி நூதனப் போராட்டம் நடத்தினர்.


 
திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி, கோயமுத்தூர் வழியாக வந்து சத்தியமங்கலம் மற்றும் திம்பம் வழியாக கர்நாடகா செல்கிறது தேசிய நெடுஞ்சாலை(209).
 
கடந்த மூன்று மாதங்களாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் பாதாள குழிகள் ஏற்பட்டதால் இதுவரை பல சாலை விபத்துகள் நடந்து சில உயிர்களும் போயுள்ளன.
 
சாலை மிகவும் மோசமாக மாறியதால் திம்பம் மலைப்பாதை மிகவும் மோசமாக மாறி நாள்தோறும் இந்த வழியாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகியும், பழுதாகியும் பல மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் நிகழ்வும் நடந்து வருகின்றது.
 
இது குறித்து பல்வேறு கட்சிகள் சார்பில் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் புகார் சொல்லியும் கோரிக்கை மனு வழங்கியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 
இதன் காரணமாக இப்பகுதி மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். இதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்தியமங்கலம் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் சிவக்குமார் தலைமையில் நேற்று மதியம் ஏ.ஐ.ஒய்.எப்., ஏ.ஐ.எஸ்.எப்., மற்றும் மாணவர் இளைஞர் பெருமன்றம் சார்பில் போராட்டம் நடத்தினர்.
 
அப்போது சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திற்குள், பேருந்து நுழையும் இடத்தில் உள்ள குழி அருகே “எச்சரிக்கை இங்கு தொடங்கி திம்பம் வரை சாலையில் உள்ள பள்ளங்களில் தேசிய நெடுஞ்சாலை துறை அடக்கம் செய்யப்பட்டுள்ளது“ என வாசகம் எழுதிய அறிவிப்பு வைத்து அதற்கு மாலை அணிந்து அப்பகுதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி நூதன முறையில் பேராட்டம் நடத்தினர்.


இதில் மேலும் படிக்கவும் :