வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (12:02 IST)

கபாலி லாபத்தின் ஒரு பகுதியை சமுதாய நலனுக்கு செலவு செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம்

கபாலி படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் ஒரு பகுதியை சமுதாய நலனுக்காக செலவு செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.



நடிகர் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான படம் கபாலி. கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்த படம்  வலைதளங்களில் வெளியாவதை தடுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த ஜூலை 22ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், திரைப்படங்களை வெளியிடும் 169 வலைதளங்களுக்கு இந்தியாவில் சேவைகளை வழங்க தடை விதித்து உத்தரவிட்டார்.

ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் கபாலி படம் வெளியாகும் அன்றே அதிகாலையில் சில வலைதளங்களில் வெளியாகி விட்டது. இது குறித்து தாணுவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு  நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி என்.கிருபாகரன் இந்த வழக்கினை விசாரித்தார்.

அப்போது நீதிபதி, தடையை மீறி ‘கபாலி’ படம் எப்படி வெளியானது? இதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனிவாசன், உயர் நீதிமன்ற நகலுடன் கபாலி படத்தை வெளியிடும் 169 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒரு உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவில், கபாலி படத்தை வெளியிடும் வலைதளங்களுக்கு சேவைகளை வழங்கக்கூடாது என்று குறிப்பிட்டு இருந்தது என்று கூறினார்.

தனியார் இணையதள சேவை வழங்கும் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.மோகன், ஒரு வலைதளத்தை முடக்கினால், மற்றொரு போலியான பெயரில் அந்த வலைதளம் உருவாக்கப்பட்டு, படத்தை வெளியிட்டு விடுகின்றனர் என்று கூறினார்.

மேலும் நீதிபதி கிருபாகரன், கபாலி படம் பல நூறு கோடிக்கு மேல் வசூலை பெற்றுள்ளது என்கின்றனர். இதனால் அந்த படத்தை தயாரித்த நிறுவனம் பெருநிறுவனமாக கருதப்படுகிறது. மத்திய அரசின் கம்பெனி சட்டத்தின்படி பெருநிறுவனங்கள் சமுதாய பொறுப்புடன் செயல்படவேண்டும். அதன்படி, இந்த படத்தின் மூலம் கிடைத்த வருவாயில், ஒரு பகுதியை அந்த நிறுவனம் சமுதாய நலனுக்காக செலவு செய்யவேண்டும். இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றால், பிறப்பிக்க தயாராக உள்ளேன்’ என்று கருத்து தெரிவித்தார்.