1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. High Court Orders Tamil Nadu Government to Respond on Private School Fee Disclosure Controversy

கல்வி கட்டணம் என்ன கருப்பு பணமா? தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் நீதிபதி கேள்வி..!

சென்னை உயர் நீதிமன்றம்
தனியார் பள்ளிகள் தங்களின் கல்விக் கட்டண விவரங்களை பள்ளியின் அறிவிப்பு பலகையில் கட்டாயம் வெளியிட வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கில், தமிழக அரசு ஜூன் 18ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஜூன் 5ஆம் தேதிக்குள் சிபிஎஸ்இ, மெட்ரிக் உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளும் கட்டண விவரங்களை காட்சிப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியது. இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
நீதிபதி எம்.தண்டபாணி முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையில், தகவல் அறியும் உரிமை சட்டம் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தாது என்றும், சிபிஎஸ்இ பள்ளிகளை மாநில அரசு கட்டுப்படுத்த இயலாது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. தமிழக அரசு தரப்பிலோ, விதிகளின்படி பள்ளிகள் கட்டணத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும், சங்கம் சார்பில் வழக்கு தொடர முடியாது என்றும் வாதிடப்பட்டது.
 
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "கல்விக் கட்டணம் ஒன்றும் கருப்பு பணம் கிடையாது, அதனை வெளியில் சொல்வதில் என்ன தயக்கம்?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், பொது நலன் சார்ந்த விஷயங்களை வெளியிட தடை இல்லை என்பதால் கட்டண விவரங்களை மறைக்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதி, இதுகுறித்து ஜூன் 18-க்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ரஜினி என்னை அழைத்தார்!.. ஆனால், போக முடியவில்லை!. உண்மையை உடைத்த அண்ணாமலை!..