கோவையில் எய்ம்ஸ்.. இடத்தை தேர்வு செய்யும் பணிகளில் தமிழக அரசு தீவிரம்...
கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். கோவை மாவட்ட ஆட்சியருடன் இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறினார். மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நீண்ட தாமதத்திற்குப் பிறகு தற்போது வேகம் எடுத்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு பிற மாநிலங்களை விடச் சிறப்பாக இருந்தாலும், தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. முதல்வர் விஜய்யின் வழிகாட்டுதலின்படி, அனைவருக்கும் தரமான மருத்துவச் சிகிச்சை கிடைப்பதையும், மருத்துவமனைகளின் சூழலை மேம்படுத்துவதையும் அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
நீட் தேர்வு விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர், "நீட் தேர்வு மாணவர்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்பதை அரசு உணர்கிறது. இரு மாணவர்களின் உயிரிழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. நீட் தேர்வு வேண்டாம் என்பதில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக உள்ளது. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பதே இதற்கு நிரந்தரத் தீர்வாகும். மாணவர்களுக்கு மனநல ஆலோசனை தேவைப்பட்டால் அரசு அமைத்துள்ள 104 உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.
மேலும், பாழடைந்த மருத்துவமனை கட்டடங்களைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மகளிர் உரிமைத் தொகை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நிதிநிலைக்கேற்ப படிப்படியாகத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், இதற்கெனச் சில அவகாசங்கள் தேவைப்படுவதாகவும் விளக்கமளித்தார்.
Edited by Siva
