இந்தியன் வங்கி தமிழகத்தில் நிரந்தரமாக மூடப்படுகிறதா? - வைகோ கண்டனம்


லெனின் அகத்தியநாடன்| Last Modified புதன், 6 ஜனவரி 2016 (15:00 IST)
திருப்பூர், திண்டுக்கல் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மண்டல அலுவலகங்களை நிரந்தரமாக மூடுவதற்கு வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
 
இது குறித்து வைகோ விடுத்துள்ள அறிக்கையில், ’’இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, 1937 ஆம் ஆணடு கானாடுகாத்தானில் சிதம்பரம் செட்டியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. உடனடியாக சென்னையிலும் இதன் கிளை தொடங்கப்பட்டது.
 
பின்னர், அயல்நாடுகளில் வாழும் தமிழர்களின் தேவைகளுக்காக பர்மாவில் ரங்கூன் நகரிலும், சிங்கப்பூரிலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகள் ஏற்படுத்தப்பட்டன. அங்கு வசித்து வந்த தமிழர்களுக்கு ஐ.ஓ.பி. வங்கியின் சேவைகள் மிகுந்த பயன் அளித்து வந்தது.
 
இந்திய அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்ட பிறகு, இந்திய ஓவர்சீஸ் வங்கியின் மொத்தம் உள்ள 3300 கிளைகளில் தமிழகத்தில் மட்டும் 1000 கிளைகள் இயங்கி வருகின்றன. தற்போது திருப்பூர், திண்டுக்கல் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மண்டல அலுவலகங்களை நிரந்தரமாக மூடுவதற்கு வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
வங்கிகள் மறுகட்டமைப்பு என்ற பெயரில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வது மோசடி ஆகும். ஏனெனில், இந்தியா முழுவதும் வங்கிகள் ஒருங்கிணைப்பு மற்றும் மறு கட்டமைப்பு குறித்து ஒரே மாதிரியான அணுகுமுறை மேற்கொள்ளப்படவில்லை. 
 
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருப்பூர் மண்டல அலுவலகத்தில் ஆண்டுக்கு ரூ.3582.18 கோடி, திண்டுக்கல்லில் ரூ.2172.23 கோடி, நாகப்பட்டினத்தில் ரூ.4490.77 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.
 
ஆனால், இதைவிடக் குறைவாக வணிகம் செய்து வரும் ராய்பூர் ரூ.798.98 கோடி, டேராடூன் ரூ.1947.41 கோடி, நாக்பூர் ரூ.1453.15 கோடி போன்ற ஐ.ஓ.பி. மண்டல அலுவலகங்களைத் தொடர்ந்து இயக்குவது என்று அதே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
 
எனவே, தமிழகத்தில் உள்ள மண்டல அலுவலகங்களை மூடுவதற்கு ஐ.ஓ.பி. நிர்வாகம் எந்த வகையான அளவுகோலைக் கணக்கில் கொண்டுள்ளது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
 
தமிழ்நாட்டில் ஏற்கனவே சிறப்பாக இயங்கி வந்த பேங்க் ஆப் தஞ்சாவூர் வங்கியை இந்தியன் வங்கியோடும், பேங்க் ஆப் தமிழ்நாடு வங்கியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியோடும் இணைத்து, அந்த இரண்டு வங்கிகளையும் ஒழித்துக் கட்டினார்கள்.
 
மெர்கண்டைல் வங்கியை வட நாட்டவர் கைப்பற்றத் திட்டம் தீட்டினார்கள். மிகக் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகே அந்த வங்கியைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கின்றோம். ஆயினும் சோதனைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாகத்தான் ஆண்டுக்குப் பல்லாயிரம் கோடிகள் பரிமாற்றம் செய்து கொண்டு இருக்கின்ற மேற்கண்ட கிளைகளை மூடுகின்ற முயற்சி ஆகும். 
 
இப்போது, தமிழ்நாட்டில் பொதுத்துறை வங்கிகளான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி ஆகிய இரண்டு வங்கிகளின் தலைமை அலுவலகங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. மற்றவை அனைத்தும் பிற மாநிலங்களில் உள்ளன.
 
சிறு, குறு தொழிற்சாலைகளும், அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் பனியன் தொழிலும் சிறந்து விளங்கும் திருப்பூர் மண்டல அலுவலகத்தை மூடுவதற்குத் திட்டமிடுவதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. 
 
மிகப் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படும் பிரதமரின் ஜன்தன் யோஜனா, மக்களுக்கான வங்கி சேவைத் திட்டம் பற்றிய அறிவிப்புகள் ஒருபுறம் வந்த வண்ணம் இருக்கின்றன. மறுபுறம் தேசிய வங்கிகளின் மண்டல அலுவலங்களை இழுத்து மூடுவதும் நடக்கிறது. வங்கி நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் மத்திய அரசின் செயல்பாடுகள் முரண்பாடாகத் தோன்றுகிறது.
 
எனவே திருப்பூர், திண்டுக்கல் மற்றும் நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல அலுவலகங்களை மூடும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :