ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்.. காவல் துறை தரப்பில் 3 தனிப்படைகள்
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மிக முக்கியமான தரவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் திருடப்பட்ட சம்பவம் மின்வாரிய வட்டாரத்திலும் காவல்துறை தரப்பிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயர்தர பாதுகாப்புடன் இயங்கும் இந்த தலைமை அலுவலகத்தின் கணினி பிரிவுக்குள் நுழைந்து, முக்கிய ஆவணங்கள் மற்றும் மின் திட்டங்கள் தொடர்பான விவரங்கள் சேமிக்கப்பட்டிருந்த ஹார்ட் டிஸ்க்கை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இந்த அதிர்ச்சிக்குரிய திருட்டு சம்பவம் தொடர்பாக மின்வாரிய உயர் அதிகாரிகள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டும், மின்வாரியத்தின் ரகசிய தரவுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் பொருட்டும், குற்றவாளிகளை மிக விரைவாக கைது செய்ய சென்னை மாநகர காவல் துறை தரப்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தலைமை அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளையும் காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், சம்பவத்தன்று அலுவலகத்திற்கு வந்த வெளிநபர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்களிடமும் தனிப்படையினர் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மின்வாரிய தலைமை அலுவலகத்திலேயே இத்தகைய துணிகர திருட்டு அரங்கேறியிருப்பது, அதன் பாதுகாப்பு பலவீனத்தை வெளிச்சமிட்டு காட்டியுள்ளதாக பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Edited by Siva
