வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 17 ஜூலை 2017 (19:34 IST)

அரவக்குறிச்சி தொகுதியை வஞ்சிக்கும் அரசு - வீடியோ

கரூர் மாவட்ட அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் ஒருவருட காலமாக இலவச சைக்கிள் கொடுக்காததை அடுத்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளளது. இந்த நிலை தொடர்ந்தால், போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


 

 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொத்தம் 16 அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு ஒரு வருட காலமாகியும் இன்றுவரை சைக்கிள் கொடுக்கப்படவில்லை. 
 
கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில் 3 சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ க்கள் அ.தி.மு.க-வினர். மீதமுள்ள குளித்தலை தொகுதி மட்டும் தி.மு.க எம்.எல்.ஏ ஆவர். இந்நிலையில் தி.மு.க தொகுதி உள்பட மொத்தம் 3 தொகுதிகளுக்கு இலவச சைக்கிள்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் ஆளுகின்ற அ.தி.மு.க ஆட்சியில் அதே சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி தொகுதியில் சைக்கிள் இன்னும் கொடுக்கப்படவில்லை.
 
இதற்கு காரணம், அந்த தொகுதி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மீது உள்ள காழ்ப்புணர்ச்சி. அவர் அணி மாறியதையடுத்தும், முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் என்கின்ற கோணத்தில் செந்தில் பாலாஜி தொகுதி என்ற காரணத்தினாலே இன்னும் அந்த தொகுதிக்கு கடந்த 2016-17 ஆம் கல்வியாண்டிற்கான சைக்கிள் கொடுக்கப்பட வில்லை. அதோடு, தற்போதைய 2017-18 ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்டு வரும் சைக்கிள் கூட இத்தொகுதிக்கு தரவில்லை 
 
இதை கண்டித்து அத்தொகுதிக்குட்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், ம.தி.மு.க ஒன்றிய செயலாளர் கோ.கலையரசன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜு விடம் மனு கொடுத்தனர். மேலும் இந்த வாரத்திற்குள் கொடுக்கப்படவில்லையெனில் பள்ளி பயிலும் மாணவ, மாணவிகளுக்காகவும், அவர்களின் நலன் காக்க கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ம.தி.மு.க அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கோ.கலையரசன், அணி மாறுவதில் இருக்கும் அக்கறை மாணவர்களின் நலனில் காட்ட வேண்டுமென்றும், அணி மாறுவதை கொண்டு சைக்கிள் தராமல் மாவட்ட நிர்வாகமும், அ.தி.மு.கவினரும் மொத்தமாக புறந்தள்ளினால் மக்களின் போராட்டம் வெடிக்கும் என்றும் கூறினார்.
 
சி.ஆனந்த குமார் - கரூர் செய்தியாளர்