1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 23 செப்டம்பர் 2015 (19:30 IST)

சகாயத்திற்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்கவேண்டும் - ஜி.ராமகிருஷ்ணன்

கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்திவரும் சகாயத்திற்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று ஜி.ராம்கிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
 
மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், “கிரானைட் முறைகேட்டில் பெரும் இழப்பு அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை மதுரை மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் அன்றைக்கு பொறுப்பிலிருந்த உ.சகாயம் ரகசியமாக ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.
 
கிட்டத்தட்ட 18 ஆயிரம் கோடி அளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அன்றைக்கு கூறப்பட்டது. அந்த அறிக்கையின் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் சாதித்தது. ஆனால், ஆட்சியராக இருந்த உ.சகாயத்தை இடமாற்றம் செய்தது.
 
இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. உயர்நீதிமன்றம் ஐ.ஏ.எஸ்.அதிகாரி உ.சகாயத்தை விசாரிக்குமாறு உத்தரவிட்டது. ஆனால், அவருக்கு தமிழக அரசோ, மாவட்ட நிர்வாகமோ, காவல்துறையோ ஒத்துழைக்கவில்லை.
 
இப்பிரச்சனை மீண்டும் உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. நீதிமன்றம் பிறப்பித்த கடுமையான உத்தரவை அடுத்து, கடந்த சில மாதங்களாக விசாரணை நடைபெற்றுவருகிறது.
 
இதற்கிடையில், கிரானைட் முறைகேட்டை விசாரிக்கும் போது, மேலூர் பகுதியைச் சேர்ந்த சேவற்கொடியோன் என்பவர் கிரானைட் குவாரியில் நரபலி கொடுக்கப்பட்டதாக புகார் ஒன்றை அளித்தார்.
 
அந்த புகார் தொடர்பாக இ.மலம்பட்டியை அடுத்துள்ள சின்னமலம்பட்டி மணிமுத்தாறு பகுதிக்குச் சென்ற உ.சகாயம் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டுமாறு உத்தரவிட்டுள்ளார்.
 
கிரானைட் முறைகேட்டைப் பொறுத்தமட்டில் சிபிஐ விசாரணை தேவையில்லை. உ.சகாயம் உயர்நீதிமன்றத்தில் அளிக்கும் அறிக்கையின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதே நேரத்தில், நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் எலும்புக்கூடுகள், எலும்புத்துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 
இதுகுறித்து காவல்துறை முழுமையாக தீவிரமாக விசாரணை நடத்தவேண்டும்.ஐ.ஏ.எஸ்.அதிகாரி உ.சகாயத்திற்கு பல்வேறு வகைகளில் மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதையும் மீறி அவர் தேசப்பற்றுள்ள ஒரு நேர்மையான அதிகாரி என்ற முறையில் கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணையை நடத்தியுள்ளார். அவருக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றார்.