1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Government Job Scam: DVAC Seals House of Man Who Posed as Former Minister's Assistant After Rs 23 Lakh Bribery Allegation

ரூ.23 லட்சம் மோசடி: முன்னாள் அமைச்சர் உதவியாளர் எனகூறிய நபரின் வீட்டிற்கு சீல்! DVAC அதிரடி

லஞ்ச ஒழிப்புத்துறை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த இளஞ்செழியன் என்பவர், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரனின் உதவியாளர் என்று கூறிக்கொண்டு, அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, அரசு பணி பெற்று தருவதாகக் கூறி சுமார் 23 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு புகார்கள் வந்தன.
 
இப்புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று ஜெயங்கொண்டத்தில் உள்ள இளஞ்செழியனின் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சோதனையின்போது, அரசு வேலைக்கான போலி ஆவணங்கள் மற்றும் சில முக்கியப் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 
அதிகாரிகள் சோதனைக்கு சென்றபோது இளஞ்செழியன் வீட்டில் இல்லை என்று தெரிகிறது. இதனால், சோதனையின் முடிவில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரது வீட்டைப் பூட்டி அதிரடியாக சீல் வைத்தனர். முன்னாள் அமைச்சரின் பெயரை பயன்படுத்தி, அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த நபரின் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சீல் வைத்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
இலவச வேட்டி, சேலை!.. ரூ.300 கோடி ஒதுக்கிய தமிழக அரசு..