1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : சனி, 7 மார்ச் 2015 (13:53 IST)

காலிப்பணியிடங்களை மறைத்து கலந்தாய்வு: அரசு மருத்துவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்

காலிப்பணியிடங்களை மறைத்து கலந்தாய்வு நடத்துவதாகக் கூறி அரசு மருத்துவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
 
முதுநிலை பயிலும் அரசு மருத்துவ மாணவர்கள், சென்னையில் உள்ள மருத்துவப்பணி இயக்குனரகம் (டி.எம்.எஸ்.) வளாகத்தில் நேற்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர் வரபிரசாத் கூறியதாவது:-
 
நாங்கள் தற்போது முதுநிலை படிப்பை தொடர்கிறோம். முதுநிலை படிப்பு ஏப்ரல் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, எங்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.
 
அதற்கான கலந்தாய்வு எதுவும் நடத்தப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி மாலை மருத்துவ கல்வி இயக்குனரக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். அதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் எங்களிடத்தில் முறையாக கலந்தாய்வு நடத்தி பணி நியமனம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
 
அதன்படி, இன்று (அதாவது நேற்று) பிற்பகல் கலந்தாய்வு தொடங்கியது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மருத்துவப்பணி இயக்குனரகத்தில் இருந்து மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு அரசு மருத்துவர்கள் ஏராளமானோர் மாற்றப்பட்டனர்.
 
எனவே மருத்துவப்பணி இயக்குனரகத்தில் ஏராளமான காலிப்பணியிடங்கள் இருந்தன. ஆனால் அந்த காலிப்பணியிடங்களை எல்லாம் மறைத்துவிட்டார்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தூத்துக்குடியில் இருந்து ஒரு மருத்துவர் திருநெல்வேலியில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு (அதாவது மருத்துவ கல்லூரிக்கு) மாற்றப்பட்டார்.
 
மேலும் அடுத்த பக்கம்..

அவர் விட்டு சென்ற தூத்துக்குடி காலிப்பணியிடம் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. மாறாக இவர்களாக ஏதோ ஒரு பட்டியலை தயார் செய்து அதில் இருந்து தேர்ந்தெடுங்கள் என்று கூறுகிறார்கள். எங்களுக்கு தெரிந்த இடத்தில் காலிப்பணியிடம் இருப்பதையே இவர்கள் மறைக்கிறார்கள் என்றால் இன்னும் எவ்வளவு காலிப்பணியிடத்தை இவர்கள் மறைத்து இருப்பார்கள்?
 
எங்களுக்கு முறையான காலிப்பணியிடங்கள் பட்டியலை வெளியிட்டு சரியான முறையில் கலந்தாய்வு செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும். அடுத்த மாதத்தில் தேர்வு வருகிறது. இதுபோன்ற சமயத்தில் இந்த பிரச்சனைகளை நாங்கள் சந்திக்கிறோம். அதுமட்டுமில்லாமல், இந்த கலந்தாய்வுக்காக வெளியூரில் இருந்து ஏராளமானோர் வந்திருக்கிறார்கள். எனவே அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். இதேபோல், அனைத்து முதுநிலை அரசு மருத்துவ மாணவர்களும் கருத்து தெரிவித்தார்கள்.
 
அதில் சிலர் கூறும்போது, எங்களிடம் அவர்கள் கலந்தாய்வு நடத்தும் போது, தற்போது இருக்கும் இடத்தை தேர்ந்தெடுங்கள், நீங்கள் கூறும் இடத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பது உறுதியானால் உங்களுக்கு முன்னுரிமை தருகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். நாங்களும் அதை நம்பி தற்போது காலியாக உள்ள பணியிடத்தை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
 
இதுமட்டுமில்லாமல் எங்களிடம் காட்டியுள்ள பட்டியலில் இடம்பெறாத ஏதாவது ஓரிடத்தில் வேறு யாரையாவது நியமனம் செய்ய ஏற்பாடு செய்தாலோ அல்லது நாங்கள் கூறிய இடத்தில் காலிப்பணியிடம் இருந்து எங்களுக்கு முன்னுரிமை வழங்காவிட்டாலோ நிச்சயமாக நீதிமன்றம் செல்வோம். பட்டியலில் அவர்கள் தெரிவித்த அனைத்து காலிப்பணியிடங்களையும் நாங்கள் குறித்து வைத்திருக்கிறோம் என்றும் கூறினார்கள்.
 
இதுகுறித்து கலந்தாய்வு நடத்தி கொண்டிருந்த அதிகாரியிடம் கேட்டபோது, ‘அவர் கள் கேட்ட இடத்துக்கெல்லாம் பணி தர முடியாது. காலியாக உள்ள இடங்களின் பட்டியலை அவர்கள் கண் முன்னே காட்டிவிட்டோம். அவர்கள் கூறுவது போல எந்த காலிப்பணியிடமும் இல்லை’ என்று கூறினார்.