ஊழலுக்கு துணை நின்ற அதிகாரிகளுக்கு அரசு ஆலோசகர் பணி: ராமதாஸ்


Ashok| Last Updated: திங்கள், 14 மார்ச் 2016 (16:21 IST)

தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருக்கும்போது ஆட்சியாளர்களின் ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் துணை நின்ற அதிகாரிகளுக்கு பரிசாக ஆலோசகர் பதவியை தமிழக ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். 


இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருக்கும்போது ஆட்சியாளர்களின் ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் துணை நின்ற அதிகாரிகளுக்கு பரிசாக ஆலோசகர் பதவியை தமிழக ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த ஆலோசகர்கள் மக்களுக்கு நன்மை செய்வதற்கான ஆலோசனைகளை வழங்குவதை விட, சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் முறைகேடுகளை செய்வது எப்படி? என ஆலோசனை வழங்குவதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர்.

2011-ம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பின்னர் அரசின் தவறுகளுக்கு துணையாக இருந்த தலைமைச் செயலாளர்களுக்கு ஆலோசகர் பதவி வெகுமதியாக வழங்கப்பட்டிருக்கிறது. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டிய தலைமைச் செயலாளர்கள் ஒரு சில மாதங்களில் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர் என்பது தான் உண்மை. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முந்தைய ஆட்சியில் நியமிக்கப்பட்டு தலைமைச் செயலாளராக இருந்த மாலதி மாற்றம் செய்யப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக தேவேந்திரநாத் சாரங்கி நியமிக்கப்பட்டார். ஒன்றரை ஆண்டு பதவிக்காலத்திற்கு பிறகு கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் ஓய்வு பெற்ற பின்னர் அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

அவருக்குப் பிறகு புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஷீலா பாலகிருஷ்ணன் 2014-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி ஓய்வு பெற்ற பிறகு  ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு பிறகு புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்ட மோகன் வர்கீஸ் சுங்கத் அரசின் தவறுகளுக்கு ஒத்துழைக்காததால் எட்டு மாதங்களில்  மாற்றப்பட்டார். அவருக்கு பதில், பல மூத்த அதிகாரிகள் இருந்த போதிலும் அவர்களை புறக்கணித்துவிட்டு பணிமூப்பு வரிசையில் மிகவும் கீழே இருந்த ஞானதேசிகனை புதிய தலைமைச் செயலாளராக தமிழக அரசு நியமித்தது. இதற்கு காரணம் முறைகேடுகளுக்கு அவர் துணை நிற்பார் என்ற நம்பிக்கை தான்.

மற்றொரு புறம் ஓய்வு வயதை தாண்டிய பிறகும் கிட்டத்தட்ட இரு ஆண்டுகள் காவல்துறை தலைமை இயக்குனர் பதவியில் நீடிக்க அனுமதிக்கப்பட்ட கே.இராமானுஜம் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவர் இப்போது தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட நிலையில், ஷீலா பாலகிருஷ்ணன் மட்டும் ஆலோசகர் பதவியில் இன்னும் நீடிக்கிறார். ஆலோசகர் பதவிக்கான பணி வரம்புகள் நிர்ணயிக்கப்படவில்லை என்ற போதிலும், அவர் முதலமைச்சரின் ஆலோசகராக செயல்பட்டதாக அறிய முடிகிறது. ஆனால், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு, அரசின் அதிகாரம் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆலோசகருக்கு எந்த பணியும் இல்லை. எனவே, அப்பணியிலிருந்து அவர் விடுவிக்கப்படுவது தான் சரியாக இருக்கும்.

ஆனால், ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனும், தலைமைச் செயலர் ஞானதேசிகன், உள்துறை செயலர் அபூர்வ வர்மா, 4 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்று பணி நீட்டிப்பில் இருக்கும் முதலமைச்சரின் மூன்றாவது செயலர் கே.என்.வெங்கட்ரமணன் ஆகியோரும் இணைந்து தமிழகம் முழுவதும் உள்ள அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு வரும் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். இவர்களின் கட்டளைக்கு பணிந்து பல மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை கண்காணிப்பாளர்களும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் பல மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட ஆட்சியர்கள் தான் தேர்தல் அதிகாரிகள் ஆவர். அவர்கள் மீதே ஆளுங்கட்சியின் தூதர்களாக அரசு ஆலோசகரும், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், முதலமைச்சரின் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளும் ஆதிக்கம் செலுத்தும்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்கள் நியாயமான நடைபெறும் என்ற நம்பிக்கை ஏற்பட மறுக்கிறது. தேர்தலின்போது பெருமளவில் முறைகேடுகளை செய்தும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும் வெற்றி பெற ஆட்சியாளர்கள் திட்டமிட்டிருப்பதாகவும், அவர்களுக்கு ஆலோசகர்- உயரதிகாரிகள் குழு உதவுவதாகவும் தெரிகிறது.

ஆளுங்கட்சியின் இந்த திட்டம் வெற்றி பெற்றால் அது மிகப்பெரிய ஜனநாயக படுகொலையாக இருக்கும். இதை தடுத்து நிறுத்த வேண்டிய இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியின் கடமை ஆகும். எனவே, இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பணி நீட்டிப்பில் உள்ள முதலமைச்சரின் செயலாளர் கே.என்.வெங்கட்ரமணன் ஆகிய இருவரையும் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்க வேண்டும். தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா ஆகியோரை தமிழக சட்டமன்றத் தேர்தலில் தலையிட முடியாத அளவுக்கு முக்கியத்துவமற்ற பணிகளுக்கு மாற்ற வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்இதில் மேலும் படிக்கவும் :