1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வியாழன், 1 ஜனவரி 2015 (08:36 IST)

கோட்சேவுக்கு சிலை வைக்க முற்பட்டால் களத்தில் இறங்கி போராடுவோம் - ஜி.கே.வாசன்

காந்தியை கொன்ற கோட்சேவுக்கு தமிழகத்தில் யாராவது சிலை வைக்க முற்பட்டால் நாங்கள் முதல் இயக்கமாக களத்தில் இறங்கி போராடுவோம் என்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
 
இது குறித்து ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
எங்கள் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த உறுப்பினர் சேர்க்கை முடிந்த பிறகு மார்ச் மாதம் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள்.
 
அதைத் தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயாராகுவோம். ஜனவரி 3ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 15 மாவட்டங்களுக்கு நான் சுற்றுப்பயணம் செய்து உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்த உள்ளேன்.
 
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு தர போவதில்லை என்று தமிழ் அமைப்புகள் கூறி இருக்கிறது.
 
இது வரவேற்கத்தக்கது. ராஜபக்சேவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய சல்மான்கான் உள்பட இந்தி நடிகர்கள் செல்ல இருப்பதாக வரும் தகவல்கள் கடும் கண்டனத்திற்குரியது.
 
பாஜக தலைவர் அமித்ஷாவை வழக்கில் இருந்து சி.பி.ஐ. விடுவித்து இருப்பதில் இருந்து, சி.பி.ஐ.யும், பாரதீய ஜனதாவும் சேர்ந்து ரத்தக்கறையை மறைக்க பார்க்கிறார்கள் என்பது தெரியவருகிறது.
 
நிலம் கையகப்படுத்துதலில் அவசர சட்டத்தை கொண்டு வரும் பாரதீய ஜனதாவின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. அவசர சட்டங்கள் மூலமே பாரதீய ஜனதா ஆட்சியை நடத்தி வருகிறது.
 
காந்தியை கொன்ற கோட்சேவுக்கு தமிழகத்தில் யாராவது சிலை வைக்க முற்பட்டால் நாங்கள் முதல் இயக்கமாக களத்தில் இறங்கி போராடுவோம்.
 
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.