1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2015 (22:40 IST)

உலக முதலீட்டாளர்கள் மாநாடு பெயரில் மகா மோசடி: ராமதாஸ் கடும் தாக்கு

உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஓர் உலக மகா மோசடி என பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் வார்த்தைகளால் வறுத்தெடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்ற நாடகம் ரூ. 100 கோடி செலவில் திட்டமிடப்பட்டு ரூ.200 கோடி செலவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது.
 
இம்மாநாட்டில் தமிழ்நாட்டில் ரூ. 2.42 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருப்பதாகவும், இதன் மூலம் 4.70 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
 
இந்த மாநாடு முதல் முதலீடுகள் வரை அனைத்துமே உலக மகா மோசடி என்பதை மக்கள் அறிவார்கள். உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் பெரும்பாலானவை ஏற்கனவே அறிவிக்கப்பட்டவை ஆகும்.
 
குறிப்பாக தூத்துக்குடியில் ஸ்பிக் யூரியா ஆலையை ரூ.6000 கோடியில் சீரமைக்கும் திட்டம் முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது. பெரம்பலூர் மற்றும் அரக்கோணத்தில் எம்.ஆர்.எஃப் நிறுவனத்தின் டயர் ஆலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டுவிட்டன. இவை அடுத்த 7 ஆண்டுகளில் ரூ.4500 கோடியில் விரிவுபடுத்தப்படும் என கடந்த மார்ச் மாதம் செபி அமைப்பிடம் அளித்த அறிக்கையிலேயே அந்த நிறுவனம் கூறி விட்டது.
 
ஆனால், அவற்றை புதிய திட்டங்களாக காட்டி மக்களை ஏமாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. உபெர் கால் டாக்சி நிறுவனம் தமிழகத்தில் அறிவிக்கப்படாத தொகையை முதலீடு செய்யப்போவதாகவும், இதனால் சென்னை மற்றும் கோவையில் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதைவிட மோசடியான அறிவிப்பு எதுவும் இருக்க முடியாது.
 
உபெர் நிறுவனம் பெயரளவில் சில வாகனங்களை மட்டுமே வாங்கும். மீதமுள்ள வாகனங்கள் ஏற்கனவே வாகனம் வைத்திருப்பவர்களிடமிருந்து ஒப்பந்த முறையில் பெறப்படும். இதனால் புதிய வேலைவாய்ப்பு எதுவும் ஏற்படாது. மாறாக வாகன ஓட்டிகளுக்கு வாய்ப்பு வழங்குவதாகக் கூறி அவர்களின் வருவாயை உபெர் நிறுவனம் சுரண்டும்.
 
ஆனால், அதை மறைத்து மக்களை ஏமாற்ற தமிழக அரசு முயல்கிறது. தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
 

ஆனால், தூத்துக்குடியில் ரூ.30,000 கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும், ரூ.12,600 கோடியில் திரவ இயற்கை வாயு கையாளும் முனையமும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 9000 வேலை ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அது சாத்தியமில்லை.
 
மாறாக, ஏற்கனவே ஏராளமான மின் நிலையங்கள், ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் அணு மின்நிலையம் ஆகியவற்றால் ஆபத்தையும், மாசுவையும் எதிர்கொண்டுள்ள தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் தான் ஏற்படும். இத்தகைய திட்டங்களுக்கு மற்ற மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவுவதால் தான் இவை தமிழகம் வந்துள்ளன.
 
பொதுவாக உற்பத்தித்துறையில் செய்யப்படும் முதலீடுகளால் அதிக அளவில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால், உற்பத்தித்துறையில் ரூ.1.04 லட்சம் கோடி முதலீட்டில் 1.14 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. ஒரு கோடி முதலீட்டில் ஒருவருக்கு மட்டுமே வேலை என்பது தமிழக மக்களுக்கு பயனளிக்காது; மாறாக தமிழகத்தின் வளத்தை பெரு நிறுவனங்கள் சுரண்டுவதற்கே வழி வகுக்கும்.
 
மின்துறையில் ரூ.1.07 லட்சம் கோடி முதலீடு செய்யப்படவிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. அதில் ரூ. 51,000 கோடி செலவில் 5345 மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இத்திட்டங்களால் 8400 பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகைப்படுத்தப் பட்ட மதிப்பீடு ஆகும்.
 
அதே நேரத்தில் இந்நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் ரூ.7.01 என்ற விலையில் மின்சாரம் வாங்கப்பட்டால், தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ரூ.48,105 கோடி இழப்பு ஏற்படும். இதைத் தான் தமிழகத்திற்கு செய்யும் நன்மை என்று முதலமைச்சர் ஜெயலலிதா கருதுகிறாரா?
 
அதேபோல், தூத்துக்குடியில் கோஸ்டல் எனர்ஜென் நிறுவனம் ரூ. 15,620 கோடியில் 1200 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மின் நிலையத்திற்கு கடந்த 2009 ஆம் ஆண்டிலேயே அடிக்கல் நாட்டப்பட்டு கடந்த 07.09.2014 முதல் உற்பத்தி தொடங்கிவிட்டது. இந்த மின்சாரத்தை யூனிட் ரூ.4.91 என்ற விலையில் மின்சார வாரியம் தான் கொள்முதல் செய்து வருகிறது. இதில் மேலும் ஒரு 600 மெகாவாட் பிரிவை தொடங்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
 
அதேபோல், கடலூர் மாவட்டத்தில் ரூ.16,600 கோடியில் IL & FS தமிழ்நாடு பவர் கம்பெனி நிறுவனம் அனல்மின் நிலையத்தை அமைக்கப்போவதாக அரசு அறிவித்துள்ளது. கடலூர் பரங்கிப்பேட்டையில் இந்நிறுவனத்திற்கான பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதன் விரிவாக்கத் திட்டமும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த உண்மைகள் அனைத்தையும் மறைத்துவிட்டு, இவை புதிய திட்டங்கள் என்று காட்டுவது உண்மையாகவே மோசடிப் புரட்சி தான்.
 
தமிழகத்தில் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படுவதையோ, தொழில் முதலீடுகள் ஈர்க்கப்படுவதையோ பா.ம.க. ஒருபோதும் எதிர்க்கவில்லை. மாறாக அவ்வாறு ஈர்க்கப்படும் முதலீடுகள் தமிழகத்தை வளம் கொழிக்க வைப்பவையாகவும், வேலைவாய்ப்புகளை பெருக்குபவையாகவும் இருக்க வேண்டும் என்று தான் பா.ம.க. வலியுறுத்துகிறது.
 
மாறாக, விரைவில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே செய்யப்பட்ட முதலீடுகளை புதிய முதலீடுகளைப் போல காட்டுவதையும், மாசு படுத்தும் தொழிற்சாலைகளை அனுமதிப்பதையும் ஏற்க முடியாது. எனவே, இனியும் மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபடாமல், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, அதன்மூலம் தமிழகத்திற்கு முதலீடுகள் தானாக தேடி வரும் நிலையை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.