செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 23 ஜூன் 2015 (19:37 IST)

கேரள அரசுடன் பேசி தமிழக காய்கறிகளை வாங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக காய்கறிகளை வாங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
 
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
 
கடந்த ஒரு மாத காலமாக கேரள அரசு தமிழக காய்கறிகளும், பழங்களும் நச்சுத்தன்மை வாய்ந்தவை எனக் கூறி வாங்க மறுக்கிறது. இதனால் தமிழகக் காய்கறிகளைக் கேரளத்துக்குக் கொண்டு வர தடை விதிப்பது என அம் மாநில அரசு அதிகாரிகள், தமிழக உணவுத் துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருப்பது காய்கறி உற்பத்தியாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.வளைகுடா நாடுகளும் தமிழக காய்கறி, பழங்களுக்குத் தடை விதிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
 
இந்த நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரி, சேலம், நீலகிரி, தருமபுரி, மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி ஆகிய 11 மாவட்டங்களில் இருந்து காய்கறி பழங்களின் 117 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பல்கலைப் பூச்சியில் துறையின், பூச்சிக் கொல்லி நச்சு இயல் ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டது.இந்த ஆய்வகம் மத்திய அரசின் சோதனை மற்றும் அளவீட்டு ஆய்வுக் கூடங்களின் தேசிய அங்கீகாரம் பெற்றதாகும்.அதில் தமிழக வாழை, தக்காளி, மிளகாய், திராட்சை, மாம்பழங்கள் ஆகியவை ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.அந்த ஆய்வின்படி 96 சதவீதம் காய்கறி, பழங்கள் நச்சுத்தன்மை இல்லை என்பது தெளிவாகிவிட்டது. எனவே, தமிழக அரசு கேரள அரசோடு உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தமிழக காய்கறிகள், பழங்களை கேரள அரசு தொடர்ந்து வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.