வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2016 (15:45 IST)

மீண்டும் அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசன்?: 15 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு

ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் அதிமுக கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது. அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 15 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட உள்ளதாக அதிமுக, தமாகா வட்டாரங்கள் கூறுகின்றன.


 
 
அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் முன்னர் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸை அதிமுக கூட்டணியில் சேர்க்கும் முயற்சிகள் நடைபெற்றது. குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் அந்த கூட்டணி அமையாமல் போனது.
 
இதனையடுத்து ஜி.கே.வாசன் பல கட்சிகளுடன் கூட்டணி வைக்க முற்பட்டாலும் அனைத்தும் ஒவ்வொரு காரணங்களால் நிறைவேராமல் போனது. இந்நிலையில் அதிமுக தரப்பும் தங்கள் கதவை மூடிவிட்டு வேட்பாளர் பட்டியலை அறிவித்து அதிர்ச்சியளித்தது.
 
இந்நிலையில் ஜி.கே.வாசன் எந்த கூட்டணிக்கும் செல்ல வழியில்லாமல் தனித்து விடப்பட்டதை போல் நின்றார். இதனால் தமாகாவிலும் சில முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் காங்கிரஸ் பக்கம் செல்ல தயாராக இருந்ததாக கூறப்பட்டது.
 
இதனையடுத்து மீண்டும் அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த முக்கிய நிர்வாகிகள் வாசனை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதிமுக தரப்பும் ஜி.கே.வாசனுக்கு மீண்டும் கதவை திறந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
அதிமுக கூட்டணிக்கு ஜி.கே.வாசனின் தமாகா வந்தால் அவர்களுக்கு 15 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் ஜி.கே.வாசன் ஜெயலலிதாவை சந்திக்க உள்ளார் எனவும் இரு கட்சி வட்டாரங்களும் பேசிக்கொள்கின்றன.