மணமக்கள் நெற்றிப்பொட்டில் ஜெயலலிதா ஸ்டிக்கர்: மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி தகவல்

மணமக்கள் நெற்றிப்பொட்டில் ஜெயலலிதா ஸ்டிக்கர்: மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி தகவல்


K.N.Vadivel| Last Updated: செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (05:27 IST)
இலவசத் திருமண விழாவில் மணமக்களின் நெற்றிப்பொட்டில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை அதிமுகவினர் ஒட்டியுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
 
 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டவும், பெண்கள் பட்டப்படிப்பு படிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும் திமுக தலைவர் கருணாநிதி  தலைமையிலான திமுக ஆட்சியில் முற்போக்கான திட்டங்கள் பல கால் நூற்றாண்டு காலத்துக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டன.
 
ஆனால், திருமண உதவித் தொகையோடு "தாலிக்குத் தங்கம்" என்ற பெயரில் நான்கு கிராம் தங்கம் வழங்கப்படும் என்றும் அதிமுக அரசு அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பை முனைப்போடு நிறைவேற்றாததால், தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
 
தமிழக அரசின் கஜானா காலியாகி விட்டதாலும், அரசின் அலட்சியத்தாலும் இந்தத் திட்டங்களுக்கான நிதியுதவி கணிசமாகக் குறைக்கப்பட்டு, அறிவிக்கப்படாத மூடுவிழா நடத்தப்பட்டு விட்டது.
 
ஆளும் அதிமுக அரசின் நடவடிக்கை அலட்சியத்தின் உச்சம் என்றால், ஆளுங்கட்சியினரின் செயல்பாடோ அருவருப்பின் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.
 
அதிமுக அரசாங்கத் திட்டம் முடக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக அதிமுக சார்பில் 68 தம்பதியருக்கு உடுமலைப்பேட்டையில் அண்மையில் நடத்தப்பட்ட இலவசத் திருமண விழாவில் அக்கட்சியினர் மணமக்களின் நெற்றிப்பொட்டில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டி இருக்கிறார்கள்.
 
ஓர் அமைப்பின் சார்பில் மக்களுக்கு சில நல உதவிகளை வழங்குவதை நான் குறைகூறவில்லை. அதே நேரத்தில் உதவி கேட்டு வருவோரை கண்ணியத்துடனும், அவர்களது சுயமரியாதைக்குப் பங்கம் ஏற்படாமலும் நடத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் உதவிக்கரம் நீட்டுவோருக்கு இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
 
மக்கள் வரிப் பணத்தில் நிறைவேற்ற வேண்டிய திருமண நிதியுதவித் திட்டத்துக்கு மூடுவிழா நடத்திவிட்டு, மணமக்கள் நெற்றிப்பொட்டில் ஜெயலலிதா ஸ்டிக்கரை ஒட்டி ஏழைகளை இழிவுபடுத்தும் அதிமுகவின் சுயவிளம்பர மோகம் எல்லை மீறிக் கொண்டிருக்கிறது.
 
இந்த அநாகரிகத்தை சுயமரியாதை உள்ள யாரும் ஏற்கவும் முடியாது,அனுமதிக்கவும் முடியாது. ஏனென்றால், இத்தகைய செயல்கள் தமிழ்நாட்டுக்கும் தமிழினத்துக்கும் ஏற்பட்டுள்ள பெரும் தலைக்குனிவு என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :