1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 4 டிசம்பர் 2015 (21:38 IST)

சென்னை மாநகர பேருந்துகளில் டிசம்பர் 8 வரை கட்டணம் இல்லை : முதல்வர் அதிரடி அறிவிப்பு

சென்னை, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு  இயக்கப்படும் தமிழக அரசு பேருந்துகள் அனைத்திலும் நாளை முதல் 8ஆம் தேதி வரை மக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என தமிழக முதல்வர்  ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


 
 
இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் :
 
கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளம்  காரணமாக  பாதிப்பு  அடைந்துள்ள மக்கள் அரசு மேற்கொண்ட போர்கால நடவடிக்கைகள் காரணமாக வெள்ளப் பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
இவர்களுக்கு  உணவு மற்றும்  குடிநீர் வழங்குவதுடன்   மருத்துவ வசதிகளும்  செய்து தரப்பட்டுள்ளன. இதுவன்றி, வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டு தங்கள் இல்லங்களிலேயே  தங்கி  உள்ளவர்களுக்கும் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
 
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தற்போது  இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பி வருகிறது. மக்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பும் இந்நேரத்தில் பல்வேறு காரணங்களுக்காக மக்கள்  உள்ளூர் பயணங்கள் மேற்கொள்ளும் அவசியம் ஏற்படும்.
 
எனவே, இதற்கு ஏதுவாக  5.12.2015 முதல் 8.12.2015 ஆகிய நான்கு நாட்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் பயணிகளிடமிருந்து  கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.
 
இந்த நான்கு நாட்களும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் கட்டணம் ஏதுமின்றி மக்கள் பயணம் செய்யலாம் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.