வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்ட 4 பேர் கைது.. கமிஷன் பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்றிய போது பிடிபட்டனர்...
ராமநாதபுரத்தில் தங்களது வங்கி கணக்குகளை சைபர் குற்றவாளிகளுக்கு வாடகைக்கு விட்டு, அதற்கு பதிலாக கமிஷன் பெற்று வந்த அதிர்ச்சி பின்னணி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆன்லைன் மோசடிகள் மூலம் ஈட்டப்பட்ட சட்டவிரோத பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்ற முயன்ற வழக்கில், காவல்துறையினர் அதிரடியாக நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு வரும் மோசடி பணத்தை அரசு மற்றும் காவல் துறையின் கண்காணிப்பில் இருந்து மறைப்பதற்காக, ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சில எளிய மக்களின் வங்கிக் கணக்குகளை வாடகைக்குப் பயன்படுத்தியுள்ளனர்.
இதற்கு ஈடாக கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் கமிஷன் தொகையாக வழங்கப்பட்டு வந்துள்ளது. அவ்வாறு பல்வேறு நபர்களின் வங்கி கணக்குகளுக்கு வந்த பல லட்ச ரூபாய் மோசடி பணத்தை, இந்த கும்பல் கிரிப்டோ கரன்சியாக மாற்றி வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்ய முயற்சித்துள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய ராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார், இந்த சட்டவிரோத கிரிப்டோ பரிமாற்றத்தில் தொடர்புடைய நான்கு முக்கிய குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், இவர்களின் வங்கிக் கணக்குகள் அனைத்தையும் போலீசார் உடனடியாக முடக்கியுள்ளனர். கமிஷன் ஆசைக்காக பொதுமக்கள் தங்களின் ஆதார், பான் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களை யாருக்கும் வாடகைக்கு கொடுக்க வேண்டாம் என போலீசார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
Edited by Siva
