அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. ஆட்சி அமைத்தால் அமைச்சர் பதவி கிடைக்குமா?
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளரும், அக்கட்சியின் முக்கிய பெண் முகமாக அறியப்பட்டவருமான காளியம்மாள், இன்று அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்ற அவர், ஈபிஎஸ் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.
கடந்த 2019 மற்றும் 2021 தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு பரவலான கவனத்தை பெற்றவர் காளியம்மாள். கட்சியின் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்திருந்தார்.
ஒரு வருட கால இடைவேளைக்கு பிறகு, தற்போது அதிமுகவில் இணைந்துள்ள அவர், எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டிப் பல்வேறு கட்சிகளிலிருந்தும் நிர்வாகிகள் அதிமுக நோக்கிப் படையெடுத்து வருவது அரசியல் வட்டாரத்தில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.
Edited by Siva