வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 31 டிசம்பர் 2015 (09:17 IST)

மக்களின் கோபம் வருகிற சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்: மா.சுப்பிரமணியன்

வெள்ள பாதிப்புக்கு திமுக தான் காரணம் என்பது பொய்யான குற்றச்சாட்டு என்றும் மக்களின் கோபம் வருகிற சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


 

 
இது குறித்து மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மேயர் துரைசாமி வெள்ள பாதிப்புக்கு திமுக தான் காரணம் என்று ஒரு பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார்.
 
கடந்த மாதம் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில், அதிமுக உறுப்பினர் 962 கிலோ மீட்டர் தூரமுள்ள மழைநீர் வடிகால்வாய்களை முன்கூட்டியே தூர்வாரி இருந்தால், இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று கேள்வி எழுப்பிய போது, அதற்கு சைதை துரைசாமி சொன்ன பதில் என்ன தெரியுமா?. 
 
மழைநீர் வடிகால் கால்வாயில் சுத்தம் செய்பவர் இறங்கி வேலை பார்க்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தடை இருக்கிறது. எனவேதான், மழைநீர் வடிகால்வாய்களில் தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை என்று சொன்னார்.
 
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்பது கழிவுநீர் கால்வாயில் உள்ள மேன்ஹோலில் தான் மனிதன் இறங்கி பணிபுரிய தடை விதிக்கப்பட்டது.
 
மழைநீர் வடிகால்வாய்க்கும் - கழிவுநீர் கால்வாய்க்கும் வித்தியாசம் தெரியாத சைதை துரைசாமி, தன் வாயில் வந்ததை மன்றத்தில் உளறி இருக்கிறார்.
 
நேற்றைய (நேற்றுமுன்தினம்) மன்ற கூட்டத்தில், திமுக உறுப்பினர்கள் கேட்டதுதான் என்ன? அவர்கள் கேட்டதெல்லாம், மழை, வெள்ள நேரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, மக்களுக்கு உதவிய பல்வேறு தொண்டு நிறுவனங்கள், சமயம் சார்ந்த அமைப்புகள், தனிப்பட்ட நபர்கள் ஆகியோர்களுக்கு, அவர்களது பணியைப் பாராட்டி, தீர்மானம் ஒன்று நிறைவேற்ற வேண்டும் என்றுதானே கேட்டார்கள்.
 
அதை நிறைவேற்ற உங்களுக்கு ஏன் கசக்கிறது?. கருணாநிதி தனது 93 வயதிலும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல், நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
 
அதைப்போலவே, சென்னை மட்டுமல்லாமல், மழை, வெள்ளம் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களைச் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறியும், நிவாரண உதவிகள் வழங்கினார்.
 
இவற்றையெல்லாம் தன் வசதிக்கு மறந்துவிட்டு, கருணாநிதியை பற்றியும் மு.க.ஸ்டாலினை பற்றியும் குற்றச்சாட்டிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
 
இவர் என்னதான் மழைவெள்ள பாதிப்புக்கும், செம்பரம்பாக்கம் ஏரி திறப்புக்கும் நாங்கள் காரணமில்லை என்று சொன்னாலும் அதனை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை.
 
என்பதால், அதனை திசைதிருப்ப கருணாநிதி மீதும், மு.க.ஸ்டாலின் மீதும் புழுதிவாரி தூற்றியிருக்கிறார். இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.