வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 15 டிசம்பர் 2015 (14:56 IST)

தலைமைச் செயலாளரின் அறிக்கை அதிமுக அரசின் ஒப்புதல் வாக்குமூலம்: கருணாநிதி

வெள்ளத்திற்குக் காரணம் தமிழக அரசின் நிர்வாகம்தான் என்பதும், தலைமைச் செயலாளரின் அறிக்கை என்பது அதிமுக அரசின் ஒப்புதல் வாக்குமூலம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


 

 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
செம்பரம்பாக்கம் ஏரி முறையாக முன்கூட்டியே படிப்படியாகத் திறக்கப்படாததாலும், அதைத் திறப்பது பற்றி உரிய நேரத்தில் திடமான முடிவு எடுக்காததாலும்தான் சென்னை நகரில் பேரழிவு ஏற்பட்டு, மாநகரத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது என்றும் தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளும் அதிமுக ஆட்சியினர் மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
 
அது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டு மென்று திமுகழகத்தின் சார்பிலே தமிழக ஆளுநரிடம் நேரில் கேட்டிருக்கிறோம்.
 
சென்னையில் அழிவுநாசம் ஏற்பட்டு; அனைத்துக் கட்சிகளின் சார்பிலும், வல்லுநர்கள் சார்பிலும் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்த பிறகு, மிக முக்கியமான இந்தப் பிரச்சினையில் காலம் கடந்து, 12 நாட்களுக்குப் பிறகு, தமிழக அரசின் சார்பில் அதுவும் தலைமைச் செயலாளர் பூசி மெழுகி, புண்ணுக்குப் புனுகு தடவும் பாணியில் "மேக்அப்" விளக்கம் அளித்திருக்கிறார்.
 
ஆணித்தரமான அடிப்படைகளுடன் விளக்கம் ஓரளவுக்கேனும் திருப்திகரமாக இருந்திருக்குமேயானால், அது குறித்த அறிக்கை எப்போதும் போல முதலமைச்சர் ஜெயலலிதா பெயரால் வந்திருக்கும்.
 
முதலமைச்சர் பதில் கூறாமல், தலைமைச் செயலாளரை விட்டு அறிக்கை கொடுத்திருப்பதில் இருந்தே, விளக்கத்தில் உண்மை இல்லை ஓட்டை உடைசல்கள் நிறைந்தது என்பதால் தான் முதலமைச்சர் பதில் அறிக்கை கொடுக்க முன் வராமல், தலைமைச் செயலாளரைப் பலிகடாவாக்கி இருக்கிறார்கள்.
 
முதலமைச்சரோ, தலைமைச் செயலாளரோ ஏராளமான குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகள் சார்பில் சாட்டியிருக்கும்போது, பத்திரிகையாளர்களை அழைத்து விளக்கம் கொடுத்திருந்தால், அவர்கள் மக்கள் மத்தியில் நிலவி வரும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி தெளிவாக்கியிருக்க முடியும். 
 
ஆனால் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவே முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மிரளுவது ஏன்? மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் ஏற்படும்? உங்கள் மீது கிஞ்சிற்றும் தவறு இல்லை என்றால் பத்திரிகையாளர்களை நேரடியாக அழைத்து தைரியமாக விளக்கம் அளிக்க வேண்டியது தானே?
 
அது மாத்திரமல்ல; செம்பரம்பாக்கம் ஏரியை டிசம்பர் 1 ஆம் தேதி திறந்து இதுவரை இல்லாத அளவுக்கு தண்ணீரை வெளியேற்றியது பற்றி, குற்றச்சாட்டு வந்து இத்தனை நாட்கள் பதிலளிக்காமல் இருந்தது ஏன்? பொதுப்பணித் துறை செயலாளரையும், அதிகாரிகளையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முயற்சித்து, அவர்கள் கூனிக் குறுகாமல் உறுதியாக நிமிர்ந்து நின்ற காரணத்தால் வேறு வழியின்றி எல்லோரையும் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் நடந்த நிகழ்வுகளை மண் மூடி மறைத்து தற்போது உதவாக்கரை அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளதா?
 
அனைத்தும் முறைப்படிதான் நடந்தது என்றால், நீதி விசாரணை அமைத்து விட்டுப் போக வேண்டியது தானே? அதற்கு முன் வரத் தயங்குவது ஏன்? அனைத்துக் கட்சித் தலைவர்களையும், அரசே அழைத்துக் கூட்டம் நடத்தி நடந்தவற்றைத் தெளிவாக்கி இருக்க வேண்டியது தானே?
 
தலைமைச் செயலாளரின் விளக்கத்தில், செம்பரம்பாக்கம் ஏரியிலே உள்ள உபரி நீரை வெளியேற்றுவது பற்றி 1–12–2015 வரை, தலைமைச் செயலாளரிடமிருந்தோ, பொதுப்பணித் துறையின் முதன்மைச் செயலாளரிடமிருந்தோ எந்த அறிவுரையும் கோரப்படவும் இல்லை; அது தேவையுமில்லை என்று கூறியிருக்கிறார்.
 
ஆனால் இதுவரை தமிழகத்திலே உள்ள சிறியது முதல் பெரியது வரை எந்த ஏரியாக அல்லது நீர் நிலையாக இருந்தாலும், அதனைத் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டதாகத் தானே செய்திகள் வெளியிடுவது அரசின் வழக்கமாக இருந்து வருகிறது! குறிப்பாக கடந்த 30ஆம் தேதிய நாளேடுகளில் கூட "பெரியாறு, அமராவதி அணைகள் இன்று திறப்பு ஜெயலலிதா உத்தரவு" என்று தான் உள்ளது.
 
இன்றைய நாளேட்டில் கூட "வெலிங்டன் நீர்த் தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விட ஜெயலலிதா உத்தரவு" என்றுதான் செய்தி வந்துள்ளது. இந்த அணைகளையெல்லாம் திறக்க உத்தரவிடும் முதலமைச்சர் ஜெயலலிதா; செம்பரம்பாக்கம் ஏரியை மட்டும் போதிய அளவுக்கு உரிய நேரத்தில் திறக்க உத்தரவிடாதது ஏன்?
 
இப்போது திடீரென்று தலைமைச் செயலாளர், ஏரியைத் திறக்க துணைப் பொறியாளருக்குத்தான் அதிகாரம் உண்டு என்று கதையையே புரட்டிப் போடுகிறாரே எப்படி?
 
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பது பற்றி தலைமைச் செயலாளரிடமிருந்தோ, பொதுப்பணித் துறையின் முதன்மை செயலாளரிடமிருந்தோ எந்த அறிவுரையும் கோரப்படவில்லை என்று தலைமைச் செயலாளர் தனது அறிக்கையிலே கூறியிருக்கிறார்.
 
ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற பொது நல வழக்கு ஒன்றில், தண்ணீர் திறப்பது குறித்து பொதுப்பணித்துறை அனுப்பிய கடிதத்தை தலைமை செயலாளர் நிராகரித்து விட்டார் என்ற தலைப்பில் வந்த செய்தியில், செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீரை விடுவிப்பது பற்றி பொதுப்பணித் துறை 29–11–2015 அன்று தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியதாகவும், ஆனால் தலைமைச் செயலாளர் மூன்று நாட்கள் அந்தக் கடிதத்தின்மீது முடிவெடுக்காமல் தூங்கி வழிந்து விட்டு டிசம்பர் 1 ஆம் தேதி இரவுதான் ஒப்புதல் கொடுத்ததாகவும் கூறப்பட்டதே; உயர் நீதிமன்ற வழக்கில் கூறப்பட்டது உண்மையா அல்லது தற்போது தலைமைச் செயலாளர் விடுத்துள்ள "சமாளிப்பு" அறிக்கையிலே சாற்றியிருப்பது உண்மையா?
 
செம்பரம்பாக்கம் ஏரியினால் வெள்ளம் ஏற்பட்டுப் பல நூறு பேர் பலியானார்கள்; பல லட்சம் ரூபாய்ச் சொத்துக்கள் நாசம்; என்றதும், அதனைத் திறப்பது பற்றி முதன்மைச் செயலாளரிடமோ, தலைமைச் செயலாளரிடமோ அறிவுரை பெறத் தேவையில்லை என்று தலைமைச் செயலாளர் அறிக்கை வெளியிடத் துணிந்திருக்கிறார் என்றால், அதிலே முதலமைச்சரின் பெயரை தலைமைச் செயலாளர் திட்டமிட்டே தவிர்த்திருக்கிறாரா? அப்படியானால் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறப்பது பற்றி முதல்வரின் அறிவுரை தான் கோரப்பட்டது, தம்முடைய அறிவுரை கோரப்படவில்லை என்று தலைமைச் செயலாளர் தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறாரா?
 
தலைமைச் செயலாளர் தனது அறிக்கையில், "நவம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக நவம்பர் மாத மத்தியில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிக அளவு நீர் வரத்து இருந்தது. 17–11–2015 அன்று ஏரியில் நீர் மட்டம் 22.3 அடியாக இருந்த நிலையில் வெள்ள நீரினை ஒழுங்கு படுத்துவதற்கான விதிகளின்படி எதிர்வரும் பருவ மழையினால் பெறக் கூடிய நீர்வரத்தினை கருத்திலே கொண்டு 18 ஆயிரம் கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டது.
 
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 30–11–2015 அன்று 22.05 அடியாக இருந்தபோது நீர் வெளியேற்றம் 800 கன அடியாக இருந்தது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
 
இதிலேதான் உண்மை இருக்கிறது. நவம்பர் 17 ஆம் தேதி ஏரியிலே 22.3 அடியாக நீர் மட்டம் இருந்த போது, 18 ஆயிரம் கன அடி நீரை வெளியேற்றியவர்கள்., நவம்பர் 30 ஆம் தேதி ஏரியின் நீர் மட்டம் 22.05 இருந்த போது 800 கன அடி நீரை மட்டுமே அனுப்பியது தவறா இல்லையா? அதைத் தான் அனைத்து எதிர்க்கட்சிகளும் கேட்கின்றன.
 
அதைத் தான் 11–12–2015 அன்று நான் வெளியிட்ட அறிக்கையிலேயும் குறிப்பிட்டிருந்தேன். நவம்பர் 17 ஆம் தேதி 18 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டது. ஆனால் நவம்பர் 24 ஆம் தேதி முதல் நவம்பர் 30 ஆம தேதிவரை மிகக் குறைந்த நீரே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விட்டது தான் சென்னை மாநகரிலே வெள்ளப் பாதிப்பு ஏற்பட முக்கியக் காரணம். இந்தத் தவறை தலைமைச் செயலாளரும் ஒப்புக் கொண்டுள்ளார்.
 
எனவே வெள்ளத்திற்குக் காரணம் தமிழக அரசின் நிர்வாகம்தான் என்பதும், தலைமைச் செயலாளரின் அறிக்கை என்பது அதிமுக அரசின் ஒப்புதல் வாக்குமூலம் தான் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
 
1 ஆம் தேதிக்கு முன்பே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து போதிய நீரை வெளி யேற்றியிருந்தால், 1 ஆம் தேதி ஒரே நாளில் 29,000 கன அடி என்ற அளவுக்கு உயர்த்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது அல்லவா? அந்த அளவுக்கு நீரை மிக அதிகமாக வெளியேற்றிய காரணத்தினால்தானே சென்னை மாநகரிலே பேரழிவு ஏற்படவும், பிணங்கள் மிதக்கவும் நேர்ந்தது. அதற்கு இந்த அதிமுக அரசு தானே பொறுப்பேற்க வேண்டும்?
 
தலைமைச் செயலாளரின் அறிக்கையில், 30–11–2015 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் 50 சென்டி மீட்டர் மழை பெய்யும் என்று தெரிவிக்கவில்லை என்றும், ஆங்காங்கு மிக மிகுந்த கனத்த மழை பெய்யும் என்றுதான் கூறப்பட்டிருந்தது என்று சமாளித்திருக்கிறார்.
 
இஸ்ரோ வி.எஸ்.எஸ்.சி.யின் இயக்குனர் சிவன் அளித்த பேட்டியில், "சென்னையில் கன மழை பெய்யும் என்று 15 நாட்களுக்கு முன்பே கணித்து, தமிழக அரசுக்குத் தகவல் கூறினோம். ஆனால் அரசு முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை" என்றே தெரிவித்திருக்கிறார்.
 
இந்திய வானிலை ஆய்வு மையம், அக்டோபர் 16 ஆம் தேதியன்றே, இந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழையின் அளவு அதிகமாக இருக்கும். குறிப்பாக இந்த ஆண்டு இயல்பை விட தமிழகத்தில் 112 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கை விடுத்ததா இல்லையா? 
 
இன்னும் சொல்லப் போனால், 1–12–2015 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், "வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று (30–11–2015) இரவு முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் இன்றும் (1–12–2015) கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது" என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.
 
தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் இதையெல்லாம் மூடி மறைத்து விட்டுத் திசை திருப்பும் அறிக்கை விடுவது சரிதானா? நீதி விசாரணை நடத்த முன் வராமல், தலைமைச் செயலாளரைக் கொண்டு அதிமுக அரசு உண்மைக்கு மாறாக இப்படிப்பட்ட அறிக்கையை வெளியிடச் செய்திருப்பதிலிருந்தே, செம்பரம்பாக்கம் ஏரியின் நீரைத் திறந்து சென்னை மாநகரையும், இங்கே வாழும் மாநகரத்து மக்களையும், சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தியதில் அதிமுக அரசின் நிர்வாகம் மாபெரும் தவறு செய்து விட்டது என்பதையும், அதை மூடி மறைக்கும் முயற்சி தான் தலைமைச் செயலாளரின் இந்த அறிக்கை என்பதையும் தமிழ் நாட்டு மக்கள் நன்றாகவே புரிந்து கொள்வார்கள். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.