1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 24 செப்டம்பர் 2015 (23:06 IST)

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தமாகா கோரிக்கை விடுத்துள்ளது.
 

 
இது குறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 
நாகப்பட்டினத்தில் இருந்து கடந்த 21ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 15 மீனவர்களை இலங்கை கடற்படை அச்சுறுத்தி, அவர்களது மீன்பிடிச் சாதனங்களை சேதப்படுத்தி, கைது செய்து, அவர்களது 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
 
மேலும், ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுமார் 150 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்களை அச்சுறுத்தும் வகையில் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர்.
 
இதனால், மீனவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என உடனே கரைக்கு திரும்பினர். இலங்கை கடற்படையின் இது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கதாகும்.
 
மீனவர் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண இரு நாட்டு பிரதமர்களும் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்வதை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்.
 
இது வரை, இலங்கை அரசால், சிறைப்பிடிக்கப்பட்ட 15 மீனவர்கள், பறிமுதல் செய்த 2 படகுகள், ஏற்கனவே இலங்கை வசம் உள்ள 26 படகுகள் என அனைத்தையும் திரும்ப ஒப்படைக்குமாறு இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்.
 
தமிழக மீனவர்கள் விவகாரத்தில், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு, நிரந்தர தீர்வு காணன தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.