தியாகத் திருநாள் எனப் போற்றப்படும் பக்ரீத் பெருநாள்: கருணாநிதி வாழ்த்து

Suresh| Last Updated: ஞாயிறு, 5 அக்டோபர் 2014 (14:43 IST)
நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளைப் பின்பற்றி வாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் தனது உளமார்ந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்வதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

"இஸ்லாமிய மக்களால் தியாகத் திருநாள் எனப் போற்றப்படும் பக்ரீத் பெருநாள் திங்கள்கிழமையன்று மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது.

"ஈத்-உல்-அஸா" என்னும் நோன்பைக் குறிக்கும் இந்தப் பக்ரீத் பெருநாள் "கடமையைச் செய்வதாலேயே உண்மையான இன்பம் பிறக்கிறது" என்பதை உணர்த்தி கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்து தவறக்கூடாது எனவும் அறிவுறுத்துகிறது.
ஒரு மனிதன் தன் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் போதித்தவர் நபிகள் நாயகம். அதனால்தான் பெரியாரும், அண்ணாவும் "இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி" எனப் புகழ்ந்தனர்.

நபிகள் நாயகத்தின் போதனைகள் மனித சமுதாயத்திற்கே பொதுவானவை. அவற்றுள் சில:

"அண்டை வீட்டுக்காரரிடம் நல்லுறவு பேணுங்கள்"; "வீண் செலவும் ஆடம்பரமும் இல்லாத முறையில் உண்ணுங்கள். முடிந்தவரை தருமம் செய்யுங்கள்"; "யாசிப்பவனுக்கு ஏதாவது கொடுங்கள்."
"உங்கள் வீட்டில் சிலந்திப் பூச்சிகளை அகற்றி, சுத்தம் செய்யுங்கள். அதனை வீட்டில் வைத்திருந்தால் அது உங்கள் வாழ்க்கையில் வறுமையை இழுத்து வரும்"; "ஒழுக்கமுள்ளவனாக இரு! மக்களில் நீயே சிறந்தவன்"; "நல்லவர்களின் வார்த்தைகளில் உண்மை இருக்கும் - அவர்களின் குணமும் நற்குணமாக இருக்கும் - அவர்கள் தவறான (ஹராமான) வழியில் பொருள் தேடுவதில்லை."
"முறையோடு சம்பாதிக்க வேண்டும். பிறரைத் துன்புறுத்தியோ, நஷ்டப்படுத்தியோ, பொய் சொல்லியோ, மோசடி செய்தோ, திருடியோ சம்பாதிக்கக் கூடாது"; "நயவஞ்சகனின் வார்த்தைகளில் பொய் இருக்கும் - அவன் வாக்குறுதி செய்தால் அதற்கு மாறு செய்வான் - விவாதம் செய்யும்போது திட்டுவான்."

"அக்கிரமம் செய்கிறவன் நிச்சயமாக அவனையே அக்கிரமத்தில் மூழ்கடிக்கிறான். ஆனால், அவனால் இதனை உணர்ந்துகொள்ள முடிவதில்லை"; "பேராசையை விட்டும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்"; "நீங்கள் உண்மை பேசுங்கள். அது அழிவைத் தந்தாலும் முடிவில் வெற்றியைத் தரும்."
இப்படி, ஒவ்வொருநாளும் வாழ்வில் மக்கள் கடைப்பிடிக்கக்கூடிய எளிய - உயர்ந்த வழிமுறைகள் பலவற்றைக் கற்பித்த நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளைப் பின்பற்றி வாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :