1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 21 செப்டம்பர் 2015 (11:50 IST)

பெண் காவலர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்: திருமாவளவன்

காவல்துறையில் பெண் காவலர்கள் மற்றும் பெண் அதிகாரிகளுக்கு உயரதிகாரிகளால் இழைக்கப்படும் இன்னல்கள் குறித்து ஆராயும் வகையில் நீதிவிசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
 
இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
திருச்செங்கோடு காவல் துறை துணை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியாவின் சாவு குறித்து குற்றப்புலனாய்வு விசாரணைக்கு (சிபிசிஐடி) தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. காவல்துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய திலகவதி சிபிசிஐடி விசாரணை நேர்மையாக இருக்காது என்று கூறியிருக்கிறார்.
 
அவர் கூறியிருப்பதை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. நீண்ட காலம் தமிழகக் காவல்துறையில் உயர் பொறுப்பில் பணியாற்றிய திலகவதி தமிழகக் காவல் துறையின் மீது நம்பிக்கை இழந்த நிலையில் அவர் இக்கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
 
அத்துடன், கீழக்கரை காவல்துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிவரும் மகேஸ்வரி என்பவர் விஷ்ணுபிரியா சாவு குறித்துக் கருத்துக் கூறும்போது, "காவல்துறை உயரதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலே காரணம்.
 
அதனால் கோகுல்ராஜ் கொலைவழக்கு சரியாக விசாரிக்கப்படவில்லை. உண்மைக் குற்றவாளிகளை விட்டுவிட்டு, வழக்குக்குத் தொடர்பே இல்லாத பலரை கைது செய்யும்படியும் அவர்கள் மீது குண்டாஸ் போடும் படியும் நெருக்குதல் கொடுத்ததாகவும், தான் மனசாட்சிக்கு விரோதமாகச் செயல்பட வேண்டிய சூழ்நிலை இருப்பதாக விஷ்ணுபிரியா என்னிடம் கூறினார்.
 
என்னைப் போன்ற பெண் காவலர்கள் அனைவரும் உயரதிகாரிகளின் நெருக்குதலால், தவறான வழிகாட்டுதலால், சுதந்திரமாகச் செயல்பட முடியாதபடி உள்ளோம். நான் இப்படி பகிரங்கமாகக் கூறுவதால் என் வேலையும் கூடப் பறிபோகலாம்..." என்று கூறியுள்ளார்.
 
காவல் அதிகாரி மகேஸ்வரியின் இந்தக் கருத்து காவல்துறையில் நிலவும் பணியாற்றும் பெண்களுக்கு எதிரான உயரதிகாரிகளின் போக்குகளை வெளிப்படுத்துகிறது. அத்துடன், கோகுல்ராஜ் கொலை வழக்கில் விஷ்ணு பிரியாவால் சுதந்திரமாகச் செயல்பட இயலவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
 
கோகுல்ராஜ் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு ஏதுவாக, அவ்வழக்கையும் சிபிஐ விசாரணைக்குட்படுத்துவதே சரியானதாகும். விஷ்ணுப்ரியா சாவுக்கு காவல்துறையில் நிலவும் பெண்களுக்கு எதிரான உயரதிகாரிகளின் ஆதிக்கப்போக்கும் இதற்குக் காரணம் என்பதை மகேஸ்வரியின் குமுறலிலிருந்து தமிழக அரசு உணர்ந்துகொள்ள வேண்டும்.
 
எனவே, காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு உரிய சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு கிடைக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். தற்போது காவல்துறையில் நிலவும் அவலங்களை வெளிப்படையாக, துணிச்சலாகக் கூறியிருக்கிற மகேஸ்வரிக்கு உயர் அதிகாரிகளால் எந்தப் பாதிப்பும் நேராத வகையில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.
 
காவல்துறையில் பெண் காவலர்கள் மற்றும் பெண் அதிகாரிகளுக்கு உயரதிகாரிகளால் இழைக்கப்படும் இன்னல்கள் குறித்து ஆராயும் வகையில் நீதிவிசாரணைக்கு ஆணையிட வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.