வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 22 ஜூன் 2015 (07:46 IST)

விவசாயிகளுக்கான வட்டி மானிய திட்டத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

விவசாயிகளுக்கான வட்டி மானிய திட்டத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
 
விவசாயிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி மானிய திட்டத்தில் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருப்பது தொடர்பாக நான் ஏற்கனவே 29.4.2015 அன்று தங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினேன்.
 
இதுதொடர்பாக மேலும் நினைவூட்டி இந்த கடிதத்தை அனுப்புகிறேன். இந்த கடிதத்துக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து நல்ல முடிவை எடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
 
விவசாயிகள் பயிர்க்கடன் தொடர்பாக 2 மாற்றங்களை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. முதலாவதாக வங்கிகள் தங்களுடைய வழக்கமான வட்டி விகிதத்தின்படி, விவசாயிகளுக்கு கடன்களை வழங்குவது, அடுத்ததாக அந்த கடன் வட்டிக்கான மானியத்தை விவசாயிகள் கணக்கில் திரும்ப செலுத்துவது என்பது இந்த மாற்றங்கள் ஆகும்.
 
ஆனால், இது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் திட்டமாக இருக்கிறது. விவசாயிகள் தற்போது பல்வேறு கஷ்டமான சூழ்நிலைகளை சந்தித்து கொண்டு இருக்கிறார்கள்.
 
ஒரு நிச்சயமற்ற நிலை விவசாயிகளுக்கு நிகழ்கிறது. எந்த நேரத்திலும் விவசாயம் பொய்த்து போகும் என்கின்ற நிலையும் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் விவசாய கடன் திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவது அவர்களை வேறு மாதிரியான பாதிப்புகளை ஆளாக்கிவிடும்.
 
உரிய நேரத்தில் அவர்களுக்கு கடன் கிடைக்கவேண்டும். உரிய நேரத்தில் அதற்கான மானியமும் கிடைக்க வேண்டும். அது இல்லாமல் மானியத்தை வேறு நேரத்தில் அவர்களுக்கு அளிப்பது தேவையான நேரத்தில் அவர்களுக்கு உரிய உதவி கிடைக்காமல் போய்விடும். இது விவசாய நலன்களை பாதிக்கும் நிலைமையை ஏற்படுத்தி விடும்.
 
எனவே பழைய முறை வட்டி மானிய திட்டத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உரிய நேரத்தில் பருவமழை பெய்யாதது, வறட்சி போன்ற காரணங்களால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து கொண்டிருக்கிறார்கள்.
 
இந்த நேரத்தில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு முன் மிகவும் தீவிரமாக ஆலோசிக்க வேண்டும். அவர்களுக்கான சலுகைகளில் எதுவும் குறைந்துவிடக்கூடாது.
 
தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு கூடுதலாக 4 சதவீதம் வட்டி மானியம் கூட்டுறவு துறை மூலம் அளிக்கப்படுகிறது. விவசாயிகளின் நலனுக்காக இதை செய்து வருகிறோம். மேலும் தமிழ்நாட்டில் கடன்களை உரிய நேரத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை தள்ளுபடி செய்யும் முறையையும் அமுல்படுத்துகிறோம்.
 
விவசாயிகள் விஷயத்தில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரும்போது, அதில் தீவிரமாக ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அடித்தட்டு மக்களை சென்றடையும் விஷயம் என்பதால் இதை சாதராணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
 
எனவே இந்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்பு அனைத்து மாநில விவசாய பிரதிநிதிகளிடமும் ஆலோசனை நடத்த வேண்டும். மேலும், தேசிய வளர்ச்சி கவுன்சில் மற்றும் நிதி அயோக் கவுன்சில் ஆகியவற்றுடன் ஆலோசித்து தேவைப்பட்டால் உரிய மாற்றங்களை கொண்டு வரலாம்.
 
அதுவரை பழைய முறையையே பின்பற்ற வேண்டும். எனது வேண்டுகோளுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.