வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 5 ஆகஸ்ட் 2014 (11:52 IST)

முதலமைச்சர் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறு: தேமுதிக பிரமுகர் கைது

ஃபேஸ்புக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறான தகவல் வெளியிட்ட தேமுதிக மேட்டுப்பாளையம் நகர செயலாளர் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகர தேமுதிக செயலாளராக இருப்பவர் சுப்பிரமணியம். இவர், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 12 ஆவது வார்டு உறுப்பினராகவும் உள்ளார்.

இவர், கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறான தகவலை ஃபேஸ்புக் வலைத் தளத்தில் வெளியிட்டிருந்தார்.

இதையறிந்த, மேட்டுப்பாளையம் நகர அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும், நகர செயலர் வான்மதி சேட் தலைமையில் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரில், முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறாக தகவல் வெளியிட்ட நகர தேமுதிக செயலர் சுப்பிரமணியத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் காவல் துறையினர் தனிப்படை அமைத்து, நகர தேமுதிக செயலர் சுப்பிரமணியத்தை தேடி வந்தனர். இந் நிலையில், 3 நாட்களாக தலைமறைவாக இருந்த சுப்பிரமணியத்தை திங்கள் கிழமை கைது செய்த காவல்துறையினர், அவரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சுப்பிரமணியத்தை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.