வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: சனி, 9 ஆகஸ்ட் 2014 (13:24 IST)

பூரண மதுவிலக்குக்கு வாய்ப்பு இல்லை - நத்தம் விஸ்வநாதன்

தற்போதைய சூழ்நிலையில் பூரண மதுவிலக்குக்கு வாய்ப்பு இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை மற்றும் வருவாய்த் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது:-

“மதுவினால் வரும் தீமையை உலகத்தில் உணராதவர் யாருமே இருக்க முடியாது. அதன் கொடுமை முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றாக தெரியும். இதில் சமவிகித கொள்கையை அரசு உருவாக்கியுள்ளது. இந்தியாவில் குஜராத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் பூரண மதுவிலக்கு இல்லை.

குஜராத்தில் கூட அதை 100 சதவீதம் அமல்படுத்த முடியாமலும், அதை விட்டுவிட முடியாமலும் இருக்கின்றனர். தமிழக அரசும் இதை விரும்பி ஏற்கவில்லை. போலி மது, கள்ளச்சாராய சாவுகளைத் தடுப்பதற்காகவும், மது விற்பனையில் சமூக விரோதிகள் மட்டும் லாபம் அடைவதை தடுத்து அதை அரசுக்கு கொண்டு சேர்ப்பதற்காகவும் மது விற்பனையை அரசு நடத்துகிறது.

எனவே ஒரு தீமையில் சில நன்மைகள் விளைகின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மேலும் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான சமூக சூழ்நிலையோ, சட்ட அமைப்போ இல்லை.

பக்கத்து மாநிலங்களும் சேர்ந்து பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் மட்டுமே தமிழகத்திலும் அது சாத்தியமாகும். மதுவினால் வருமானம் வர வேண்டும் என்பது முதலமைச்சர் ஜெயலலிதாவின் விருப்பம் இல்லை. இங்கு பூரண மதுவிலக்கை அமல்படுத்த சாத்தியம் அமையவில்லை.

நாம் மட்டும் இங்கு தனித்து அதை அமல்படுத்த முடியாது. வள்ளுவர் காலத்தில் இருந்தே மதுவுக்கு எதிரான பிரசாரத்தை நாம் 2 ஆயிரம் ஆண்டுகளாக செய்துவருகிறோம்.

திருக்குறளில் அதை படிக்க முடியும். சொந்தக் காசில் தனக்குத்தானே சூனியம் வைப்பது போன்றது மது பழக்கம் என்பதை குறள் விளக்குகிறது. தற்போதைய சூழ்நிலையில் மாற்றுவழி இதுதான். வருவாயும் வர வேண்டும்.

சமுதாயமும் விழிப்புணர்வு அடைய வேண்டும். எனவே விழிப்புணர்வு பிரசாரத்துக்காக புதிய உத்திகள் தோன்றினால் உறுப்பினர்கள் சொல்லுங்கள். தமிழகத்தில் முதன் முதலில் மதுவை அறிமுகம் செய்ததே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான்.

மதுவினால் வரும் வருமானத்தை மத்திய அரசு ஈடு செய்வதாக இருந்தாலோ, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டாலும் தமிழகத்திலும் மது ஒழிப்பை அமல்படுத்த முடியும். மது விலக்கு பற்றிய உங்கள் கோரிக்கைகள் அனைத்துக்குமே முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உடன்பாடு உள்ளது.

தமிழகத்தில் சில்லறை மது விற்பனையில் இவ்வளவு லாபம் வருவதை கண்டு வெளிமாநிலத்து அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள். தமிழகத்தில் போலி மதுக்களை மட்டுமல்ல போலி அரசியலையும் முதலமைச்சர் ஜெயலலிதா ஒழித்துவிட்டார். டாஸ்மாக் கடைகளை நிறுவ விதிகள் உள்ளன.

மாநகராட்சி, நகராட்சியில் உள்ள கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்களில் இருந்து 50 மீட்டர் தூரத்துக்கு மேலும், மற்ற பகுதிகளில் அவற்றில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்கு மேலும் டாஸ்மாக் கடைகள் நிறுவப்பட வேண்டும். இதில் விதிமுறைகள் மீறப்படவில்லை. ஆனால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதில் உள்நோக்கம் இல்லாவிட்டால் டாஸ்மாக் கடைகளை வேறிடத்துக்கு கொண்டு செல்கிறோம்.

தற்போது ஆயிரத்து 800 டாஸ்மாக் கடைகள் உள்ளன. கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை. அதே அளவில்தான் உள்ளது. அங்கு 26 ஆயிரத்து 304 பேர் பணியாற்றுகின்றனர். 4 ஆயிரத்து 297 மது “பார்”கள் உள்ளன. கேரளா, புதுச்சேரி போன்ற பக்கத்து மாநிலங்களில் இருந்து போலி மது கடத்தப்படுவதை தடுக்க ஏற்கனவே 29 சோதனை சாவடிகள் இருந்தன.

தற்போது மேலும் 16 சோதனை சாவடிகளை அமைத்துள்ளோம். பாட்டிலுக்கு கூடுதலாக ஐந்து ரூபாய், 10 ரூபாய் என்று விலை வைத்து விற்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம். மது விற்பனைக்கான இலக்கு வைத்து யாரையும் அரசு நிர்ப்பந்திக்கவில்லை. தவறு செய்து அரசு நடவடிக்கையில் சிக்கியவர்கள்தான் இப்படி சொல்கின்றனர்.

போலி மது விற்பனை, கள்ளசாராயம் ஆகியவை பற்றிய தெரிய வந்தால், 10581 என்ற இலவச எண்ணுக்கு போன் செய்து தகவல் கூறலாம். கள்ளச்சாராயத்தில் இருந்து திருந்தியவர்களுக்கு சிறு கடைகள் நடத்த ரூ.30 ஆயிரத்தை மானியத்தோடு அரசு வழங்குகிறது. போதைப் பொருட்களை பள்ளி, கல்லூரிகளின் அருகே விற்பனை செய்வதை தடுக்க தீவிர கண்காணிப்பை அரசு மேற்கொண்டுள்ளது“. இவ்வாறு நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.