வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 3 பிப்ரவரி 2015 (09:28 IST)

இளங்கோவன் அறிக்கை மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளித்துள்ளது: ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் கூட்டறிக்கை

சமீபத்தில் நடைபெற்ற சில நிகழ்வுகள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மூலமாக வெளியிடப்பட்ட சில அறிக்கைகள் ஆகியவை மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளித்துள்ளது என்று ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
 
ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களான மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூட்டாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
 
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
சமீபத்தில் நடைபெற்ற சில நிகழ்வுகள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மூலமாக வெளியிடப்பட்ட சில அறிக்கைகள் ஆகியவை மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளித்துள்ளது.
 
இவற்றை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கருத்தில் கொண்டு இவை ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று அறிவுரை வழங்கியிருப்பதாக செய்தித்தாள்களில் படித்தோம். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நடவடிக்கை எங்களுக்கு ஆறுதல் தந்துள்ளது. 
 
காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமைக்காகவும், வளர்ச்சிக்காகவும், எங்களுடைய உழைப்பையும், பங்களிப்பையும் தருவதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.
 
கட்சியில் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரையும் கலந்து, அரவணைத்து கட்சியின் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜெயந்தி நடராஜன் விலகியபோது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தமிழகத்த் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
 
அந்த அறிக்கையில் அவர், ‘கட்சியில் இருந்து இன்னொருவர் தன்னுடைய மகனுடன் வெளியேறினால் காங்கிரஸ் கட்சிக்கு விமோசனம் கிடைக்கும்’ என்று அதில் குறிப்பிட்டுடிருந்தார்.
 
இது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் அவரது மகள் கார்த்தி சிதம்பரத்தையும் குறி வைத்து இளங்கோவன் இந்த கருத்தை தெரிவித்ததாக, ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் கட்சியின் மேலிடத்தில் புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.