செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : வெள்ளி, 29 மே 2015 (18:55 IST)

ஐஐடி மாணவர் அமைப்புக்கு தடை: ஈ.வி.கே.எஸ். கடும் எச்சரிக்கை

கல்வித்துறை காவிமயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஐஐடி மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், எனவே இதை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சில காலமாகவே சென்னைக்கு அருகில் கிண்டியில் அமைந்துள்ள இந்திய தொழில் நுட்ப கழகத்தின் பல்வேறு கழகத்தில், பல்வேறு சமூகப் பிரச்சனைகள் அடிக்கடி தலைதூக்கி வருகின்றன. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு ஆதிக்க சக்திகளின் குரல் பல்வேறு நிலைகளில் வலிமை பெற்று ஒலித்து வருகிறது.
 
மே 7 ஆம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்ட அனாமதேய கடிதத்தின் அடிப்படையில், துறை செயலாளர் கிண்டியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழக இயக்குநருக்கு மே 15 ஆம் தேதி கடிதம் அனுப்பியிருக்கிறார். கடிதம் கிடைத்த 10 நாட்களுக்குள் அவசர அவசரமாக எழுதப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் அம்பேத்கர்-பெரியார் மாணவர் வட்டத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்திருக்கிறார். இதைவிட ஜனநாயக, சட்டவிரோத செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.
 
அம்பேத்கர்-பெரியார் மாணவர் வட்டத்தின் மூலமாக அங்கே பயில்கிற மாணவர்களிடையே சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களையும், அவர்கள் எதிர்நோக்குகிற பல்வேறு பிரச்சனைகளையும் அடிக்கடி கலந்து பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். மேலும், பல்வேறு கருத்தரங்குகள் மூலமாக மத்திய பாஜக ஆட்சியில் கல்வித்துறை காவிமயமாக்கப்பட்டு வருவதை எதிர்த்தும், அதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதித்துள்ளனர். குறிப்பாக கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மூன்றாவது பாட மொழியாக ஜெர்மன் மொழிக்கு மாற்றாக சமஸ்கிருதத்தை திணிக்கிற முயற்சியை கடுமையாக எதிர்த்துள்ளனர்.
 
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகிற தொழில் நுட்பக் கழகங்களில் சைவ உணவு அருந்த தனியாக உணவகங்கள் அமைக்கும்படி மனிதவளத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளது. மாணவர்கள் உணவின் அடிப்படையில் இப்படி பிரித்தாளுவதை எவரும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். இந்த உணவைத்தான் உண்ண வேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பது போன்ற பல இந்துத்வா கருத்துக்களை திணிப்பதை அறிவியல் ரீதியாக சிந்திக்கிற மாணவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். அதனுடைய விளைவுதான் இன்றைக்கு வெடித்திருக்கிறது.
 
மத்திய மனித வளத்துறை மூலமாக பல்வேறு அமைப்புகளில் இந்துத்துவாக் கருத்துக்களை திணிப்பதற்கு ஏற்ற வகையில், அதில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களை நியமிப்பதில் செய்யப்பட்ட ஒழுங்கீனங்களை எதிர்த்துக் குரல் எழுப்பியுள்ளனர்.
 
கிண்டி தொழில்நுட்ப கழக மாணவர்கள் இத்தகைய சமூக விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு, சமூகநீதிக்கு ஆதரவாக போராடுவதை சகித்துக் கொள்ளாத வகுப்புவாத உணர்வு கொண்ட ஆதிக்கச் சக்திகள், இன்றைக்கு கடுமையான நடவடிக்கை எடுத்து அதை முடக்குகிற வகையில் ஆணை பிறப்பித்துள்ளனர்.
 
இந்த ஆணைக்கு எதிராக போராட முன்வந்துள்ள கிண்டி தொழில்நுட்ப கழக மாணவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அனைத்து வகையிலும் துணை நிற்கும் என்கிற உறுதியை வழங்க விரும்புகிறேன்.
 
அம்பேத்கர்-பெரியார் மாணவர் வட்டத்திற்கு வழங்கப்பட்டிருந்த அங்கீகாரத்தை ரத்து செய்ததை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்க தவறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.