செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : புதன், 16 டிசம்பர் 2015 (19:27 IST)

பொறுப்பற்ற கோமாளித்தனமான ஜெயலலிதா ஆட்சி: இளங்கோவன் பரபரப்பு பேட்டி

அதிமுகவில் இருந்து முன்னாள் டிஜிபி நட்ராஜ் நீக்கப்பட்ட இந்த சம்பவம், இது ஒரு பொறுப்பற்ற அரசு கோமாளித்தனமான அரசு என்பதற்கு சான்று என்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத ஜெயலலிதாவால் அதிமுகவுக்கு வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


 
 
சென்னையில் அண்டை மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்களை பகுதி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கும் பணியை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது கூறுகையில், "வெள்ளத்தில் பொருட்களை இழந்த மக்களுக்கு தமிழக அரசு மானிய விலையில் வீட்டு உபயோக பொருட்களான பிரிட்ஜ், கிரைண்டர், வாஷிங் மெஷின், மின்விசிறி ஆகியவற்றை வழங்கவேண்டும். அத்துடன் ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்களையும் வழங்கவேண்டும்.
 
அதிமுகவில் இருந்து முன்னாள் டிஜிபி நட்ராஜ் நீக்கப்பட்ட இந்த சம்பவம், இது ஒரு பொறுப்பற்ற அரசு கோமாளித்தனமான அரசு என்பதற்கு சான்று. எதற்கெடுத்தாலும் அம்மா புராணம் தான் பாடுகின்றனர். இது ஹிட்லர் ஆட்சியைத் தான் ஞாபகப்படுத்துகிறது.

ஜெயலலிதா பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூட கூறவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் இவரை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இது தேர்தலில் தான் எதிரொலிக்கும். அதிமுவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது" என்று அவர் கூறினார்