ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்


Suresh| Last Updated: புதன், 30 மார்ச் 2016 (09:00 IST)
பொறியியல் படிப்புக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்துள்ளார்.

 

 
கலந்தாய்வு மூலம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் பி.இ., பி.டெக். சேருவது குறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது:-
 
இந்த ஆண்டு மாணவர்கள் நலன் கருதி, முதன் முதலாக விண்ணப்ப படிவங்கள் அச்சிடப்படவில்லை. அதற்கு மாறாக, மாணவர்கள் ஆன்-லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். என்ஜினீயரிங் விண்ணப்பம் குறித்த அறிக்கை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடப்படும்.
 
ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் பிளஸ் -2 முடித்த மாணவ-மாணவிகள் ஆன்-லைனில் என்ஜினீயரிங் படிக்க விண்ணப்பிக்கலாம்.
 
மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே ஆன்-லைனில் தங்கள் பெயர், தந்தை பெயர், வயது, முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்து கொள்ளலாம்.
 
ஆனால், பிளஸ் -2 தேர்வு முடிவு வெளிவந்த உடன், அதில் அவர்கள் எடுத்த மதிப்பெண்களை ஏற்கனவே ஆன்-லைனில் பதிவு செய்திருந்த விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.
 
பின்னர், "செயலாளர், தமிழ்நாடு என்ஜினீயரிங் அட்மிஷன்" என்ற முகவரிக்கு ரூ.500 க்கு டி.டி. எடுக்க வேண்டும். மாணவர்கள் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் ரூ.250-க்கு டி.டி. எடுத்தால் போதும்.
 
இந்த டி.டி. எண்ணை அந்த விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து, அதை பதிவிறக்கம் செய்து அதில் கூறப்பட்டுள்ள அனைத்து சான்றுகளின் நகல்களும் எடுத்து சேர்த்து "செயலாளர், தமிழ்நாடு என்ஜினீயரிங் அட்மிஷன், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, சென்னை-600025" என்ற முகவரிக்கு பிளஸ் -2 தேர்வு முடிவு வெளியிட்ட 10 நாட்களுக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். 
 
நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் கொண்டுவந்து கொடுக்க வேண்டும் என்றாலும் கொடுக்கலாம்.
 
வீட்டில் இருந்தபடி ஆன்-லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் ஏப்ரல் 14 ஆம் தேதி அறிவிக்கப்படும் மையங்களில் உள்ள ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அந்த மையங்களின் உதவியை விண்ணப்பிக்க நாடலாம். கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :