செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 23 ஜூலை 2015 (00:51 IST)

4ஆவது முறையாக நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தைக் கொண்டு வருவதா? மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்

நான்காவது முறையாக நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தைக் கொண்டு வருவதா? என மத்திய அரசுக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
கடந்த 2013-இல் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வந்து இந்நாட்டு உழவர் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தினைச் சிதைக்கவும், உள்நாட்டு உணவுப்பொருள் உற்பத்திக்கு முட்டுக்கட்டையிட்டு மக்கள் விரோதபோக்கைக் கடைபிடித்தது.
 
அப்போது, இச்சட்டத்தை அதிமுக தலைமை எதிர்த்தது. திமுக தலைமை ஆதரித்தது. அதே நிலையில், 2014 ஆம் ஆண்டு ஆட்சிபீடம் ஏறிய பாஜக தலைமையிலான சனநாயக முற்போக்குக் கூட்டணி அரசு, காங்கிரஸ் அரசு கொண்டுவந்த நிலம்கையகப்படுத்தும் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்தும் மீண்டும் அதை நாடாளுமன்ற ஒப்புதலுக்கு வைக்காமல் குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் அவசரச்சட்டமாகவே கொண்டுவந்து வேளாண்மையாளர்களின் உழைக்கும் உரிமையைத் தட்டிப்பறிக்கும் கொடுஞ்செயலில் இறங்கியது.
 
எல்லாம் பறிக்கப்பட்டு நிலம் மட்டும் தான் விவசாயிடம் இருந்தது. அதையும் பறித்துவிட முழுமூச்சுடன் மோடி அரசு செயல்படுவது கண்டு கொந்தளித்த எதிர்ப்பாளர்களை மழுங்கடிக்கும் வகையிலே மீண்டும் அக்கட்டத்தை கடந்த மார்ச் 10இல் நாடாளுமன்ற ஒப்புதலுக்கு வைத்தபோது முன்னர் எதிர்த்த அதிமுகவின் தலைமை தங்களின் திருத்தக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாகக் கூறி ஏற்று ஆதரித்து வாக்களித்தது.
 
இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்ப்பதாகக் கூறி போராட்டம் நடத்திய பாமக நாடாளுமன்றக் கூட்டத்தில் அமைதிக் காத்தது. ஆக தமிழகக் கட்சிகளான அதிமுக, திமுக, பாமக போன்ற கட்சிகள் இதில் உழவர்களின் நலன்களையும், உரிமைகளையும்விட தன் கட்சியின் இலாப நட்ட கணக்குகளையே முதன்படுத்தி ஆதரிப்பதும், எதிர்ப்பதுமான நாடகங்களுக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக கடந்த 15ஆம் நாளில் தில்லியில் கூட்டப்பட்டக் முதலமைச்சர் கூட்டத்தில் கலந்து கொள்ளாததுடன் இச்சட்டத்தை மீண்டும் எதிர்ப்பதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு மடல் தீட்டியுள்ள நிகழ்வு அமைந்துள்ளது.
 
மேலும், பிரதமர் மோடி கூட்டிய முதல்வர்கள் மாநாடு தோல்வியில் முடிந்துள்ளதால் மீண்டும் உழவர்களின் விளைநிலங்களைப் பறித்து உள்நாட்டு வெளி நாட்டு முதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நான்காவது முறையாக அவசரச் சட்டமாகக் கொண்டு வர முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. இதை நாம் தமிழர் கட்சி மிக வன்மையாக எதிர்க்கிறது.அப்படியொரு முயற்சி நடந்தால் அதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது.
 
அதுபோல், இந்நிலப்பரிப்புச்சட்டதிற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா இதிலாவது உறுதியாக நின்று தமிழகத்தில் இச்சட்டம் நுழையாவண்ணம் பாதுகாக்க வேண்டும். மற்ற கட்சிகளும் இதில் தெளிவான ஒரு முடிவை எடுத்து அறிவிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி தமிழக சனநாயக ஆற்றல்களை வலியுறுத்துகிறது.
 
மாநில அரசுகளின் உரிமைகளைத் தட்டிப்பறிக்கும் பாஜக அரசின் இந்த உழவர் எதிர்ப்புப்போக்கைக் கண்டித்து விரைவில் நாம் தமிழர் கட்சி தமிழகம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.