வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 15 மார்ச் 2016 (18:43 IST)

திருவள்ளுவரை அரசியல்வாதிகள் வரிசையில் சேர்த்த தேர்தல் ஆணையம்

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் சிலைகளை மூடும் நடவடிக்கையில் இறங்கியுள்ள தேர்தல் ஆணையம் திருவள்ளுவர் சிலையையும் மூடியுள்ளது.
 

 
தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மே 16ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்குகிறது. ஓட்டு எண்ணிக்கை மே 19ஆம் தேதி நடைபெறும்.
 
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது. இதையொட்டி தேர்தலுக்காக அமைக்கப்பட்டு இருந்த சோதனைச் சாவடிகள், கண்காணிப்புக்கான பறக்கும் படைகள் உடனடியாக செயல்படத் தொடங்கியுள்ளது.
 
இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் சிலைகளை மூடும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியாரின் சிலைகள் மூடப்படுவது குறித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
பின்னர், தந்தை பெரியார் சிலைகளை மறைக்கும் எண்ணம் இல்லை என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.
 
இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சித் தலவர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலையை தேர்தல் ஆணையம் துணியால் மூடி மறைத்துள்ளது. தமிழுக்கு பெருமை சேர்த்த திருவள்ளுவருக்கே இந்த நிலைமையா? என்று தமிழ் ஆர்வலர்கள் நொந்துபோயுள்ளனர்.
 
அது சரி, கன்னியாகுமரியில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையையும் தேர்தல் ஆணையம் மூடினாலும் மூடும்....