1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 30 மே 2015 (14:35 IST)

மொட்டைக் கடிதத்தை ஆதாரமாகக் கொண்டு ஐ.ஐ.டி.யில் மாணவர் அமைப்பை தடை செய்வதா? - கி.வீரமணி

சென்னை ஐ.ஐ.டி.,யில் மாணவர்கள் அமைப்பான அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட அமைப்பினை மொட்டைக் கடிதத்தின் அடிப்படையில் தடை செய்துள்ளதைக் கண்டித்து, போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.
 

 
அவரது அறிக்கை வருமாறு:-
 
சென்னை ஐ.ஐ.டி.,யில் படிக்கும் மாணவர்கள் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் எனும் பெயரில் அமைப்பு ஒன்றை நடத்தி வருகின்றனர் (தொடக்கம் 14.4.2014). ஜாதி ஒழிப்பு, சமூகநீதி இவற்றை மையப்படுத்திக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் உயர் சிந்தனை அமைப்பு இது.
 
இந்த அமைப்பு நடத்திய கூட்டம் ஒன்றில், எண்ணிக்கையில் சிறிய அளவு உள்ளவர்கள் முக்கியமான பதவிகளைப் பெரும்பாலான அளவுக்கு ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள் என்றும், அதேநேரத்தில் கீழ்மட்ட உடலுழைப்புப் பணிகளில் நூற்றுக்கு நூறு தாழ்த்தப்பட்டவர்களுக்கே ஒதுக்கப்படுகிறது என்றும் எடுத்துக் கூறியுள்ளனர்.
 
இதில் என்ன குற்றம் நேர்ந்துவிட்டது? இந்தப் பணியைத்தானே - பிரச்சாரத்தைத் தானே திராவிடர் கழகமும், சமூகநீதியில் அக்கறை உள்ள கட்சிகளும் செய்துவருகின்றன. இதில் சட்ட மீறலோ - வெறுப்போ எங்கே இடம்பெற்று இருக்கிறது?
 
அதேபோல, மாட்டிறைச்சி தடை குறித்தும், மதச்சார்பின்மைக்கு விரோதமாக மத்திய ஆட்சி செயல்படுவது குறித்தும் துண்டறிக்கைகளை விநியோகம் செய்தார்களாம்.
 
இதிலும் குற்றம் காண இடம் எங்கே இருக்கிறது? நடப்பைத்தானே விமர்சித்து வருகிறார்கள்? மாணவர்களுக்குச் சமுதாய அக்கறை இல்லையா? கருத்துக் கூறும் உரிமை கிடையாதா?
 
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தங்கள் முழு வாழ்க்கையையே ஒப்படைத்துக்கொண்டு ஓயாது உழைத்த தலைவர்கள் தந்தை பெரியார், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் பெயரில் அமைப்பினை நடத்திட மாணவர்களுக்கு உரிமை கிடையாதா? இந்தத் தலைவர்கள் எல்லாம் சமூக விரோதிகளா?
 
மனித உரிமைக்காகவும், சமத்துவத்துக்காகவும், சமூகநீதிக்காகவும் பாடுபட்ட தலைவர்கள் பெயரில் மாணவர் சமுதாயம் ஓர் அமைப்பை ஏற்படுத்துவது பாராட்டுக்குரியதே - சட்டப்படியும் சரியானதே!
 
மதவாதத்தைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ். -இன் துணை அமைப்பான ஏபிவிபி செயல்படலாம்; பெரியார் அம்பேத்கர் பெயரில் முற்போக்குச் சிந்தனை அமைப்புகள் செயல்படக்கூடாதா?
 
இதுகுறித்து மொட்டைக் கடிதம் ஒன்றை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைக்குக் கடிதம் எழுதியுள்ளனராம். அதன் அடிப்படையில் அம்பேத்கர் பெரியார் பெயரில் உள்ள அமைப்புத் தடை செய்யப்பட்டுள்ளது.
 
இது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். முதலாவதாக கையொப்பம் போடாத மொட்டைக் கடிதத்தை ஆதாரமாகக் கொண்டு நடவடிக்கை எடுப்பதே சட்ட விரோதமும், நியாய விரோதமும், நடைமுறை விரோதமும் ஆகும்.
 
அதுமட்டுமல்ல; ஓர் அமைப்பைத் தடை செய்வதற்குமுன் சம்பந்தப்பட்ட அமைப்பின் பொறுப்பாளர்களிடம் விளக்கம் கேட்டிருக்கவேண்டும்.
 
இரண்டையும் பின்பற்றாமல் நியதிகளுக்கு விரோதமாக மனிதவள மேம்பாட்டுத் துறையும், ஐ.ஐ.டி. நிர்வாகமும் நடந்துகொண்டுள்ளது என்பது மிகவும் வெளிப்படையாகும்.
 
இந்த நடவடிக்கைமூலம் என்ன தெரிகிறது? அம்பேத்கர் பெரியார் அமைப்பு மிகவும் தேவை என்பதைத்தான் புலப்படுத்துகிறது. ஐ.ஐ.டி.,யும், மனிதவள மேம்பாட்டுத் துறையும் சமூகநீதிக்கும், மதச்சார்பின்மைக்கும் விரோதமாக நடந்துகொண்டுள்ளது. அதேநேரத்தில், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் சட்டப்படியான சமூகநீதிக்கும், மதச்சார்பின்மைக்குமாகப் பாடுபடுகிறது என்பது விளங்கவில்லையா?
 
மனிதவள மேம்பாட்டுத் துறை - அம்பேத்கர் பெரியார் பெயரால் அமைந்த வாசகர் வட்டத்தின் மீதான தடையை உடனே விலக்கிக் கொள்ளவேண்டும்; இல்லையெனில், திராவிடர் மாணவர் கழகம் ஒத்த கருத்துள்ள பிற அமைப்புகளின் தலைவர்களையும், மாணவர்களையும் கூட்டி, இணைந்து உரிய வகையில் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
தந்தை பெரியார், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் சிந்தனையாளர்களுக்கு, சமூகநீதி அமைப்புகளுக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக இதனைக் கருதவேண்டும்.
 
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்நாட்டின் பெரும்பான்மையினர் ஆவர். அவர்களுக்கான சவாலை எதிர்கொள்வோம்.
 
இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.