வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 11 ஜூன் 2016 (13:08 IST)

’மயிரால் உயிரை இழந்த டாக்டர்’ மரணத்தில் மர்மம் - மீண்டும் பரிசோதனை

சென்னை முடிமாற்று சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்ற திருச்சி டாக்டர் திடீரென இறந்தார். தற்போது அவரது சாவில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்துள்ளதால், உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்படவுள்ளது.
 

 
வேலுார் மாவட்டம், ஆரணி, எஸ்.வி.நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (22) சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து முடித்த இவர் பயிற்சி டாக்டராக பணியில் சேர இருந்தார். தலையின் முன்பகுதி சற்று வழுக்கையாக இருந்ததால் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சலூன் ஒன்றில் சிகிச்சைக்காக கடந்த 15.05.16 அன்று சேர்ந்தார்.
 
அறுவைச் சிகிச்சை செய்வதற்காக அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப் பட்டது. அளவிற்கு அதிகமாக கொடுத்ததால் அவரது இடுப்பிற்கு கீழ் செயல் இழந்தது. அதனை தொடர்ந்து 17.5.16 அன்று வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
 
அங்கு சிசிச்சை பலனின்றி சந்தோஷ்குமார் இறந்தார். அவரது உடலை திருச்சி கொண்டு வந்து எஸ்ஆர்சி கல்லூரி ரோட்டில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.
 
இந்நிலையில் தங்களது மகன் சாவில் மர்மம் இருப்பதாகவும் தவறான சிகிச்சையால் அவர் இறந்து விட்டதாகவும் எனவே சடலத்தை தோண்டி எடுத்து மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவரது பெற்றோர் நுங்கம்பாக்கம் போலீஸ், திருச்சி மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரிடம் புகார் மனு கொடுத்தனர்.
 
அதனை தொடர்ந்து முடிமாற்று சிகிச்சை மையத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் வெள்ளி யன்று சந்தோஷ்குமாரின் சடலத்தை தோண்டி எடுக்கவும் போலீசார் முடிவு செய்தனர்.
 
இதற்காக நுங்கம்பாக்கம் போலீசார் திருச்சி வந்தனர். அவர்கள் திருச்சி ஆட்சியரிடம் அனுமதி பெற்று சடலத்தை தோண்டி எடுத்து மருத்துவக் கல்லூரி டாக்டர் செல்வகுமார் தலைமையிலான குழுவினர் மறு பிரேதப் பரிசோதனை செய்யவுள்ளனர்.