1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 8 டிசம்பர் 2015 (20:03 IST)

வெள்ள நிவாரணமாக பணம் வேண்டாம்; பொருட்களாக கொடுங்கள்: நடிகர் கார்த்தி

வெள்ள நிவாரணத்துக்கு உதவி செய்ய நினைப்பவர்கள் தயவு செய்து பணமாக தரவேண்டாம். பொருட்களாக கொடுத்தால் அனைத்து இடங்களுக்கு கொண்டு சேர்க்க உதவியாக இருக்கும் என்று நடிகர் கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்


 


சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் 4வது நாளாக ​வெள்ள நிவாரணப் பொருட்களை நடிகர் சங்கம் சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களுக்கு நடிகர்​,​​ நடிகைகள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள்.அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வெறு இடங்களிலிருந்து வந்த வெள்ள நிவாரண பொருட்களை தன்னார்வ தொண்டர்கள் மற்றும் என்.ஜி.ஓக்களின் உதவியுடன் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு பால், பிஸ்கேட், பிரட் போன்ற உணவு பொருட்களை பிரித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நடிகர், நடிகைகள் சென்று உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்.
 
 
இந்நிலையில், அந்த பள்ளியில் நிவாரணப் பொருட்களை பிரித்து அணுப்பும் பணியை மேற்பார்வையிட்டு வரும் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி செய்தியாளர்களை சந்தித்தார், அப்பொழுது கூறுகையில், "சென்னையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தன்னார்வர்கள் மட்டுமின்றி பல நடிகர் மற்றும் நடிகைகள் இதில் கலந்து கொண்டு எங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்.
 
தண்ணீரின் அளவு குறைய குறைய மக்களின் தேவை மாறிக் கொண்டேயிருக்கிறது, அதற்கேற்றார்போல நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம். நானும் விஷாலும் வட சென்னைக்கு சென்று அங்கிருக்கும் நிலைமையை அறிந்து அவர்களின் தேவை என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கேற்ற விதத்தில் நிவாரண பொருட்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.
 
காவல் துறையும் எங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல இடங்களில் தண்ணீர் வற்றாத நிலையில் அங்கிருக்கும் பெரும்பாலான குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருப்பது பெரிய வருத்தத்தை தருகிறது. பொதுமக்கள் பலரும் இங்கு வந்து எங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். ஐ.டியில் வேலை செய்பவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் என பலர் வருகிறார்கள். இன்னும் பலர் நினைத்தால் இங்கு வந்து அவர்களால் முடிந்த உதவிகளை செய்யலாம்.
 
மக்கள் அனைவரும் களத்தில் இறங்கி வெள்ளம் வடிந்த பகுதிகளில் இருக்கும் அசுத்தங்கள் மற்றும் கழிவுகளை சுத்தம் செய்தால் மட்டுமே விரைவில் பரவயிருக்கும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். மக்கள் அனைவரும் தயவு செய்து அவரவர் தெருவை சுத்தம் செய்தாக வேண்டும்.

அரசாங்கத்தால் அனைத்து இடங்களிலும் விரைவாக சுத்தம் செய்ய முடியுமா என்பது சந்தேகமே. வெள்ள நிவாரணத்துக்கு உதவி செய்ய நினைப்பவர்கள் தயவு செய்து பணமாக தரவேண்டாம். பொருட்களாக கொடுத்தால் அனைத்து இடங்களுக்கு கொண்டு சேர்க்க உதவியாக இருக்கும்.
 
விஷால் தற்போது பல நிவாரண பொருட்களுடன் கடலூர் மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். அதுமட்டுமின்றி அகரம் பவுண்டேஷன் மூலம் சிதம்பரம் யூனிவர்சிட்டியிலிருந்தும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மூலமாகவும் பல நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட இடத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்.
 
முழுவதுமாக வெள்ளம் வடிந்தபின் மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, உப்பு, மிளகாய், துணிகள் போன்ற பொருட்கள்தான் மிக மிக முக்கியமானது, பாதிக்கப்பட்டவர்களை சகஜ நிலைக்கு கொண்டுவர இதுதான் அடுத்து அதிகமாக தேவைப்படும் என்பதால் தற்போது அதனை முழுவீச்சில் பேக் செய்து கொண்டிருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.