வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Modified: செவ்வாய், 21 ஜூலை 2015 (12:13 IST)

எண்ணூர் கடலில் பிடிபடும் மீன்களை சாப்பிட்டால் நோய் வரும்: ஆய்வில் தகவல்

எண்ணூர் துறைமுகம் பகுதியில் பல்வேறு கழிவுகள் வந்து சேருகின்றன. இதனால், எந்தவித பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டது.

இந்திய நீர்வள அறக்கட்டளை மற்றும் அண்ணா பல்கலைக்கழகம், உணவு மற்றும் வேளாண் அமைப்பு, ஐ.நா. உலக சுகாதார அமைப்பு ஆகியவை எண்ணூர் துறைமுகம் கடல் பகுதியை ஆய்வு செய்தன. அப்போது இங்கு எந்தவிதமான கழிவுகள் கடல் நீரில் கலக்கின்றன என்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதில் 8 வகையான உலோக பொருட்கள் 5 விதமாக கடல் நீரில் கலப்பது தெரிய வந்தது. இதை மீன்கள் சாப்பிடுவது பற்றியும், அந்த மீன்களை மனிதர்கள் சாப்பிட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சில வகை மீன்களை பிடித்து ஆய்வு செய்த போது அவற்றில் அதிக அளவில் பாதரசம் இருப்பது தெரிய வந்தது. இந்த மீனில் அனுமதிக்கப்பட்ட அளவான 0.5 யூனிட்டை விட அதிகமாக அதாவது 0.9 யூனிட் பாதரசம் இருந்தது.

இந்த மீனை உண்டவரின் நரம்பு, ஜீரண சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. ஒரு கிராமுக்கு 0.05 முதல் 5.5 மைக்ரோ கிராம் அளவு காட்மியம் உலோகம் இருக்கலாம். ஆனால் சிலவகை மீன்களில் இருந்து 19.25 யூனிட் வரை இருக்கிறது. அதிக அளவில் செம்பு, நிக்கல், ஆர்கானிக் ஆகியவையும் குறிப்பிட்ட மீன்களில் காணப்படுகின்றன. இதனால் நுரையீரல் பாதிக்கப்படும். மூச்சு கோளாறு ஏற்படும்.

அனுமதிக்கப்படும் ஈயத்தின் அளவு 0.05 யூனிட். ஆனால் இந்த பகுதியில் பிடிபடும் மீன்களில் இதைவிட அதிகமான ஈய தன்மை கொண்ட மீன்கள் பிடிபடுகின்றன. இந்த விதமான மீன்களை உண்டால் குழந்தைகளுக்கு நரம்பு பாதிப்பு, மூளை பாதிப்பு போன்றவை ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகமாகி சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

இது போன்ற ஆபத்தான உலோகங்கள் மற்றும் விஷ தன்மை உள்ள ஆர்கானிக் மற்றும் ரசாயனங்கள் ஆகியவற்றுடன் காணப்படும் மீன்களை பிடித்து உண்பதால்  புற்றுநோய் உள்பட வேறு சில ஆபத்தான நோய்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வு செய்த நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.