வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 17 ஜூலை 2014 (16:07 IST)

கருணாநிதி குடும்பத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு: சட்டசபையிலிருந்து திமுகவினர் கூண்டோடு வெளியேற்றம்

திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தைப் பற்றி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அவதூறாகப் பேசியதாக சர்ச்சை எழுந்ததால் தமிழக சட்டசபையிலிருந்து திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
 
திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தை பற்றிய அதிமுக உறுப்பினரின் அவதூறு பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட திமுகவினரை, சபாநாயகர் தனபால் உத்தரவின் பேரில் அவைக் காவலர்கள் பேரவையிலிருந்து வெளியேற்றினர்.
 
இன்று காலை சட்டசபை கூடிய போது, கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு குடிநீர் பற்றாக்குறை, வறட்சி உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகள் மீது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், பேரவை தலைவர் தனபால் அனுமதி மறுக்கவே அவையில் இருந்து திமுக, தேமுதிக, இடதுசாரிகள் வெளிநடப்பு செய்தனர்.
 
கேள்வி நேரத்திற்குப் பின்னர் அவையில் மீண்டும் திமுகவினர் கூடினர். அப்போது, அவையில் பேசிய அதிமுக உறுப்பினர் ராஜலட்சுமி, திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
 
இதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரி திமுகவினர் கூச்சலிட்டனர். தொடர்ந்து அவர்கள் அமளியில் ஈடுபட்டதால், திமுகவினரை கூண்டோடு வெளியேறுமாறு அவைத்தலைவர் தனபால் உத்தரவிட்டார்.
 
அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக உறுப்பினர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை தலைவர் சர்வாதிகாரி போல் செயல்படுவதாக குற்றம்சாற்றினார்.
 
சட்டப்பேரவை அதிமுக விழா மேடை போல் இருப்பதாகவும், பேரவைத் தலைவர் அதிமுக கைப்பாவையாக மாறிவிட்டதாகவும் திமுக உறுப்பினர் துரை முருகன் குற்றம்சாற்றினார்.