கட்சியில் இணைத்துக் கொள்வது அரசியல் நாகரீகமற்ற செயல் அல்ல: கருணாநிதி


Suresh| Last Updated: சனி, 19 டிசம்பர் 2015 (08:38 IST)
ஒரு கட்சியில் இருந்து விலகி வருபவர்களை, மற்றொரு கட்சியிலே இணைத்துக் கொள்வது அரசியல் நாகரீகமற்ற செயல் அல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
 


 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
 
கேள்வி:- தற்போதைய மழைநீர் வெள்ளப் பிரச்சினைக்கு ஒரு சிலர் திமுக ஆட்சியையும் சேர்த்துக் குறைசொல்கிறார்களே?. குறிப்பாக "நால்வர்" அணியைச் சேர்ந்த ராமகிருஷ்ணனே சொல்லியிருக்கிறாரே?. 
 
பதில்:- திமுக வை பிடிக்காதவர்கள் வேண்டுமென்றே சாட்டுகின்ற குற்றச்சாட்டு இது. அதிமுக அரசு திமுக ஆட்சியின் பல திட்டங்களுக்கு மூடு விழா நடத்தியதன் விளைவுதான் சென்னை பாதிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமே தவிர, திமுக ஆட்சி மீது எந்தத்தவறும் சொல்ல முகாந்திரம் சிறிதும் இல்லை.
 
எனினும் அதிமுக அரசை நேரடியாக விமர்சிக்க அஞ்சுபவர்கள், திமுக வை விமர்சித்து விட்டு அதன் தொடர்ச்சியாகவே அதிமுக வை விமர்சிக்கிறார்கள். அவர்களுடைய உள்நோக்கமும் கபட வேடமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்து வருகிறது.
 
நால்வர் அணியின் கருத்துகளுக்கு இதுவரை நான் பதிலளிக்காமல்தான் இருந்தேன். ஆனால் குட்ட குட்ட குனிந்து கொண்டிருப்பது சரியல்ல அல்லவா?. 
 
கேள்வி:- சென்னைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டது தொடர்பாக ஆசிரியர்களைக் கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்களே?. 
 
பதில்:- சில மாதங்களுக்கு முன்புகூட மாணவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பேராசிரியர் ஒருவரைப் பணியில் இருந்து துணைவேந்தர் நீக்கி, அதனால் மாணவர்கள் போராடக்கூடிய நிலைமை ஏற்பட்டது.
 
இப்போதும் தாக்கப்பட்ட மாணவர் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்படலாம் என்றும் செய்திவந்துள்ளது. பல்கலைக்கழகத் துணை வேந்தராக, அதிமுக அனுதாபி ஒருவரை நியமித்ததன் காரணமாகவே பிரச்சினைகள் எழுவதாகக் கூறப்படுகிறது. பல்கலைக்கழகங்கள் அரசியல் நோக்கத்தோடு நடந்து கொள்ளாமல் மாணவர்களின் கல்வியோடு நிறுத்திக்கொள்வதுதான் நல்லது. 
 
கேள்வி:- பெட்ரோல், டீசலுக்கு திடீர் என வரி உயர்வு செய்யப்பட்டிருக்கிறதே?. 
 
பதில்:- பெட்ரோல், டீசலுக்கு விலை குறைக்கப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை முதல் நாள் ஏற்படுத்திவிட்டு, அடுத்த நாள் பெட்ரோல் லிட்டருக்கு 30 பைசாவும், டீசல் லிட்டருக்கு 1.17 பைசாவும் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இது தேவையற்ற ஒன்றாகும். எனவே, மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமார் 2,500 கோடி ரூபாய் நிதிச் சுமையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 
 
கேள்வி:- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "எங்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது, இன்றைக்கு மக்கள் மத்தியில் திமுக செல்வாக்கு இழந்து வருகிறது" என்று கூறியிருக்கிறாரே?. 
 
பதில்:- "வைகோ" வைப் பொறுத்தவரையில் அவரை நான் நன்கறிவேன். நல்ல பேச்சாளர், ஆனால் நாட்டிலே என்ன நடக்கிறது, மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அவருடைய கட்சியில் இருந்து வரிசையாக மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் விலகி, திமுக விலே தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள்.
 
ஆனால் வைகோ அவருடைய கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாகவும், திமுக செல்வாக்கை இழந்து வருவதாகவும் கூறுகிறார் என்றால் அவரைப்பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள்?. அதுமாத்திரமல்ல; அவருடைய கட்சியினரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தான் ஏதோ வலியுறுத்தி அழைத்து வருவதைப் போலவும், எனக்குத் தெரியாமல் அந்தச் சம்பவங்கள் நடைபெறுவதைப் போலவும் வைகோ பேட்டியில் கூறியிருக்கிறார். 
 
அதுவும் தவறான எண்ணம். எனக்குத் தெரியாமல், திமுக வில், இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு வாய்ப்பில்லை என்பதை அனுபவத்தின் அடிப்படையில் வைகோ அறிவார். அரசியலில் நாகரிகம் இல்லாமல், மதிமுக நண்பர்களை திமுக வில் கட்சித் தலைமை இணைத்துக் கொள்வதாகவும் வைகோ பேட்டியளித்திருக்கிறார்.
 
ஒரு கட்சியில் இருந்து விலகி வருபவர்களை, மற்றொரு கட்சியிலே இணைத்துக் கொள்வது அரசியல் நாகரீகமற்ற செயல் அல்ல. வைகோ உள்ளிட்ட அனைவருமே திமுக வில் இருந்து பிரிந்து சென்று இணைந்து கொண்டதுதானே மதிமுக அது மட்டும்தான் நனி நாகரிகமா?. இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :