1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK and AIADMK Joint Protest Against TVK Government Over Eral Market Closure Creates Political Ruckus

தவெக அரசுக்கு எதிராக அதிமுக, திமுக இணைந்து போராட்டம்.. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பு...!

தமிழக அரசியல்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட ஏரல் பகுதியில், சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த பாரம்பரியமிக்க வாரச்சந்தையை தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ சரவணன் உத்தரவின் பேரில் மூடியதாக கூறி, ஆளுங்கட்சிக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் கைகோர்த்து போராட்டத்தில் குதித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
 
இந்த கூட்டு போராட்டத்தில் திமுகவின் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் ஆகியோர் தங்களது தொண்டர்களுடன் இணைந்து ஒரே மேடையில் பங்கேற்றனர். 
 
மேலும், டிடிவி தினகரனின் அமுமுக கட்சியும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசை எதிர்க்க பல தசாப்த கால அரசியல் எதிரிகளான திமுகவும் அதிமுகவும் கூட்டாக போராடுவது இதுவே முதல்முறையாகும்.
 
ஏற்கனவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் திமுகவும் அதிமுகவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க ரகசியமாக முயன்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. விரைவில் இரு கட்சிகளும் அதிகாரப்பூர்வமாக இணையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏரல் வாரச்சந்தை விவகாரத்தில் இரு கட்சிகளும் ஒன்றாக வீதியில் இறங்கி போராடி இருப்பது, அந்த அரசியல் சந்தேகங்களை மேலும் வலுப்படுத்துவதாக நடுநிலையான அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
மைக்ரோசாப்ட் கொடுத்த திடீர் அதிர்ச்சி.. 4800 பேர் வேலையை விட்டு நீக்கம்...!