வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 31 மார்ச் 2016 (15:15 IST)

திமுகவுக்கும், அதிமுகவுக்கும் அரை வித்தியாசம் கிடையாது - ராமதாஸ் தாக்கு

திமுகவுக்கும், அதிமுகவுக்கு ஆறு வித்தியாசங்கள் இல்லை... அரை வித்தியாசம் கூட காண முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்க இன்னும் 22 நாட்களே உள்ள நிலையில் அதற்கான களப்பணிகளில் பாட்டாளி மக்கள் கட்சி தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. தேர்தலில் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரின் கவனமும் களப் பணிகளில் தான் இருக்க வேண்டும்.
 
ஆனால், திமுக தலைவர் கலைஞரோ கள நிலவரம் புரியாமல்  அதிமுகவுக்கு மாற்று தமது கட்சிதான் என்று தமக்குத் தாமே ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார்.
 
ஒரு தேர்தலில் தமது கட்சிதான் வெற்றி பெறும் என்று கூறுவதற்கான அனைத்து உரிமைகளும் அக்கட்சித் தலைவருக்கு உண்டு. ஆனால், ‘பாமகவுக்கு பரவலான பலம் இல்லை’ என தினமலர் நாளிதழே கூறிவிட்டது. அதனால் அதிமுகவுக்கு, திமுக மட்டும்தான் போட்டி என்று கலைஞர் பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
 
தினமலரில் ஏதோ ஒரு செய்தியில் இடைச்செருகலாக இப்படி ஒரு வரி வந்ததற்கு இவ்வளவு மகிழ்ச்சியடையும் கலைஞர், கடந்த 25ஆம் தேதியிட்ட தினமலர் நாளிதழில் முதன்மைச் செய்தியாக ‘சிக்குமா?’ என்ற தலைப்பில் திமுக நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதாக வந்த செய்திக்கு என்ன பதில் சொல்வார்? என்பதை அவர் விளக்க வேண்டும்.
 
தினமலர் இதழில் திமுகவின் பலவீனத்தை அம்பலப்படுத்தும் வகையில் நாளும் செய்திகள் வந்து கொண்டுதான் இருகின்றன. அவற்றையெல்லாம் கலைஞர் படிக்காமல் இருக்க மாட்டார். ஆனால், அவற்றையெல்லாம் வசதியாக மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு, ஏதோ ஒரு வரி செய்தியை வைத்துக்கொண்டு திமுகதான் மாற்று என கலைஞர் துள்ளிக் குதிப்பது அவரது பலவீனத்தையும், அச்சத்தையுமே காட்டுகிறது.
 
சரி...அவையெல்லாம் இருக்கட்டும். கள நிலைமை மற்றும் கொள்கை அடிப்படையில் பார்ப்போம். அதிமுகவுக்கு திமுக எந்த வகையில் மாற்று? மது விற்பனையில் தொடங்கி மழை நிவாரணத்தில் ஊழல் செய்வது வரை அனைத்திலும் இரு கட்சிகளும் ஒரே அச்சில் வார்க்கப்பட்டவை தானே?
 
இதைத் தானே, ‘‘அதிமுகவும், திமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’’ என்று பெருந்தலைவர் காமராஜர் கூறினார். உண்மை இவ்வாறு இருக்கும்போது ஊழல் சுனாமி அதிமுகவுக்கு ஊழலின் ஊற்றுக்கண் திமுக எப்படி மாற்று ஆகும்?
 
தமிழகம் இப்போது எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கான தீர்வு திமுகவிடம் உள்ளதா? மதுவுக்கு எதிராக 35 ஆண்டுகளாக நான் நடத்திவரும் போராட்டம் காரணமாக மக்களிடம் எழுச்சி ஏற்பட்டது. இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, தமிழகத்தில் மது ஆறாக ஓட தாம்தான் காரணம் என்பதையெல்லாம் மறந்து விட்டு திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்த சந்தர்ப்பவாதக் கட்சி தானே திமுக?
 
ஊழலில் ஊற்றுக்கண்ணான திமுகவால் ஊழலை ஒழிக்க முடியாது. இது கலைஞருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், ஊழலை ஒழிப்பதற்காக சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவோம், லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவோம், பொது சேவை சட்டத்தைக் கொண்டு வருவோம் என்றெல்லாம் பாமக அறிவித்தவுடன், அலறித்துடித்து அவற்றையெல்லாம் நாங்களும் செய்வோம் என உரத்த குரலில் காப்பி அடித்த கட்சி தானே திமுக?
 
மதுக்கடைகளை தெருவுக்குத் தெரு திறந்து மக்களை சீரழித்தீர்கள். கல்வியை கடைச்சரக்காக மாற்றினீர்கள். மருத்துவம் பெறுவதற்காக மக்கள் கடனாளிகள் ஆகும் நிலைமையை ஏற்படுத்தினீர்கள். விவசாயம் செய்யும் உழவர்களுக்கு தீராக்கடனும் தற்கொலையும் மட்டுமே பரிசு என்ற நிலைமையை உருவாக்கினீர்கள். இந்த விஷயங்களில் திமுகவுக்கும், அதிமுகவுக்கு ஆறு வித்தியாசங்கள் இல்லை... அரை வித்தியாசம் கூட காண முடியாது.
 
தெளிவாக கூற வேண்டுமானால் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே தான் போட்டி என்று கலைஞர் கூறியிருப்பதே ஒரு நயவஞ்சக திட்டம் ஆகும். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளையுமே ஆட்சிக்கு வர அனுமதிக்கக்கூடாது என்பது தான் மக்களின் விருப்பம்.
 
இந்த இரு கட்சிகளுக்கும் மாற்று தேவை என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த மாற்று தான் பாட்டாளி மக்கள் கட்சி. மக்கள் விரும்பும் மாற்றை அவர்களின் பார்வையிலிருந்து மறைத்து வைத்து விட்டு, அதிமுக, திமுக ஆகிய இரு தீமைகளை மட்டும் மக்கள் முன் வைத்தால் அவற்றிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் தான் கலைஞர் இப்படி ஒரு கருத்தைக் கூறியுள்ளார். கலைஞரின் இந்த நாடகம் வெற்றி பெறாது. இந்த தேர்தலில் திமுக மாற்று அல்ல... ஏமாற்று சக்தி என்பதை மக்கள் அறிந்துள்ளனர்.
 
இந்த தேர்தலில் திமுக களத்திலேயே இல்லை. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பாகவே திமுகவின் தோல்வி உறுதிசெய்யப்பட்டு விட்டது என்பது தான் உண்மை. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அன்புமணியா, அம்மாவா? என்ற போட்டி தான் நிலவுகிறது. இத்தகைய நிலையில் திமுக தான் மாற்று என்பது நல்ல நகைச்சுவை. 
 
2016&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் கதாநாயகன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தான். கதாநாயகி பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைதான். இந்த கூட்டணிதான் வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும்... தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக சுரண்டி வந்த திமுகவும், அதிமுகவும் வீழ்ச்சியடையப் போவது உறுதி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.