234 தொகுதிகளிலும் விருப்பமனு வாங்கும் தேமுதிக.. காமெடி உச்சம் என நெட்டிசன்கள் கிண்டல்..!
தமிழக அரசியலில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிக எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு சமூக வலைதளங்களில் விவாத பொருளாகியுள்ளது.
தமிழகத்தின் 234 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கும் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் பிப்ரவரி 12-ஆம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என தேமுதிக தலைமை அறிவித்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.
தற்போது வரை தேமுதிக எந்த கூட்டணியில் இணையும் என்பது இறுதி செய்யப்படவில்லை. கடந்த தேர்தல்களில் சொற்ப இடங்களிலேயே போட்டியிட்ட அந்த கட்சி, தற்போது தனித்து போட்டியிட போகிறதா அல்லது கூட்டணிக்கு அழுத்தம் கொடுக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இட ஒதுக்கீடு மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த எந்தத் தெளிவும் இல்லாத நிலையில், அனைத்து தொகுதிகளுக்கும் விருப்பமனு கோருவதை கண்டு நெட்டிசன்கள் "இது காமெடியின் உச்சம்" என மீம்ஸ்கள் மூலம் கிண்டல் செய்து வருகின்றனர். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva