வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 27 மே 2015 (18:34 IST)

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக – அதிமுக கவுன்சிலர்கள் மோதல்

சேலம் மாநகராட்சி மன்ற இயல்பு கூட்டம் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு மேயர் சவுண்டப்பன் தலைமை வகித்தார். ஆணையாளர் செல்வராஜ் வரவேற்றார். கூட்டம் தொடங்கியதும் மேயர் சவுண்டப்பன், அதிமுக கவுன்சிலர்கள் கொண்டு வந்த அவசர தீர்மானத்தை வாசித்தார்.
 
அப்போது அவர், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் 5வது முறையாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு சேலம் மாநகராட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் என கூறினார்.
 
இதை கேட்ட அனைத்து அதிமுக கவுன்சிலர்கள் எழுந்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சுமார் 10 நிமிடம் கைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். இந்த நிலையில் திமுக கவுன்சிலர் தெய்வலிங்கம் எழுந்து, ஏன் இப்படி மன்ற கூட்டத்தில் நடந்து கொள்கிறீர்கள். 10 நிமிடத்திற்கு மேலாக கைத்தட்டினால் மக்கள் பிரச்சனை பற்றி எப்போது பேசுவது என்றார். இதில் கோபம் அடைந்த அனைத்து அதிமுக கவுன்சிலர்கள் தெய்வலிங்கத்தை கீழே அமர கூறினர். ஆனால் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.
 
இந்த நிலையில் தண்ணீர் பாட்டில் ஒன்று தெய்வலிங்கம் மீது வந்து விழுந்தது. இதனால் அவர் சத்தம் போட்டு அருகில் இருந்த மைக்கை பிடித்து ஆவேசமாக பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த சில அதிமுக கவுன்சிலர்கள் தெய்வலிங்கத்தை திட்டினர். பதிலுக்கு தெய்வலிங்கமும் திட்டினார்.
 
இதில் கோபம் அடைந்த அதிமுக கவுன்சிலர்கள் மாரியப்பன், பாமாகண்ணன், ஜமுனாராணி ஆகியோர் தெய்வலிங்கம் அருகில் வந்து ஏன் இப்படி பேசுகிறீர்கள். 5வது முறையாக அதிமுக பொதுச்செயலாளர் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். நாங்கள் சந்தோஷத்தில் மேஜையை தட்டுகிறோம். நீங்கள் பேசாமல் அமருங்கள் என கூறினர். இதனால் இரண்டு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் தெய்வலிங்கம் தாக்கப்பட்டார்.
 
பின்னர் பாமாகண்ணன், மாரியப்பன், ஜமுனா ராணியும் தாக்கப்பட்டனர். இதனால் மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த தெய்வலிங்கம் மேயர் டேபிள் முன் சென்று சத்தம் போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மண்டல தலைவர்கள் வின்சென்ட் மாதேஸ்வரன், தியாகராஜன், சண்முகம், ஜெயப்பிரகாஷ் மற்றும் சிலர் அங்கு வந்து தட்டி கேட்டனர். இதனால் திமுக கவுன்சிலர்கள் அங்கு வந்து தகராறு செய்தனர். இதில் கோபம் அடைந்த அதிமுக கவுன்சிலர்கள் சிலர் அங்கு வந்து தெய்வலிங்கத்தை மன்ற கூடத்தை விட்டு வெளியேற கூறி விரட்டி விட்டனர். இதற்கு அவர் மறுத்தார். இதனால் அவரை கவுன்சிலர்கள் சிலர் தாக்கியபடி இழுத்து சென்று வெளியே தள்ளினர். இதில் கோபம் அடைந்த திமுக மாநகராட்சி எதிர்கட்சி தலைவி, புவனேஸ்வரி முரளி, மாதையன், சரளாகுணசேகரன் மற்றும் சிலர் அதிமுகவினருடன் தகராறு செய்தனர். இதனால் இரண்டு தரப்பினும் மாறி மாறி தள்ளிக்கொண்டனர்.
 
பின்னர் கவுன்சிலர் தெய்வலிங்கத்தை அதிமுக கவுன்சிலர்கள் மெயின் ரோடு வரை தள்ளி விட்டனர். இதை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் மன்ற கூடம் முன் நின்று கோஷமிட்டனர். மேயர் ஒழிக. குண்டர்களை விட்டு கவுன்சிலர்களை தாக்கிய மேயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பு இல்லை என்பது போன்ற கோஷங்களை முழங்கினர்.
 
இந்த நிலையில் தெய்வலிங்கத்தின் சித்தி குறிச்சி, சித்தப்பா இளங்கோ ஆகியோர் மன்ற கூட்டத்திற்குள் புகுந்து மேயர் சவுண்டப்பன் டேபிள் முன் நின்று அவரை திட்டினர். வேண்டும் என்றே தெய்வலிங்கத்தை அதிமுக கவுன்சிலர்கள் தாக்கி உள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். யார் யார் தெய்வலிங்கத்தை தாக்கினார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்தம் போட்டனர். இதனால் மன்ற கூட்டத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்து வெளியில் அனுப்பி வைத்தனர். பின்னர் அனைவரும் மெயின் ரோட்டிற்கு வந்து கீழே அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.